david warner Facebook
Cricket

'வார்னர் அத சரிசெய்யலனா, கோச் ஆன என்னத்தான் தொலச்சு எடுத்துருவாங்க' - ஷேன் வாட்சன்!!

மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் டேவிட் வார்னர் மந்தமான ஆட்டத்தை வெளிப்படுத்தி 47 பந்துகளில் 51 ரன்கள் அடித்தது ரசிகர்களை வெறுப்படையச் செய்தது.

Justindurai S

நடப்பு ஐபிஎல் தொடரில் இதுவரை 4 போட்டிகளில் விளையாடிய டெல்லி கேபிடல்ஸ் அணி, நான்கிலுமே தோல்வி அடைந்துள்ளது. அந்த அணியின் கேப்டன் டேவிட் வார்னர் நான்கு ஆட்டங்களில் 3 அரை சதங்களை அடித்துள்ளார், ஆனால் 114.83 என்ற மந்தமான ஸ்ட்ரைக் ரேட்டில். குறிப்பாக மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் டேவிட் வார்னர் மந்தமான ஆட்டத்தை வெளிப்படுத்தி 47 பந்துகளில் 51 ரன்கள் அடித்தது ரசிகர்களை வெறுப்படையச் செய்தது.

மேலும் இந்த சீசனில் இன்னும் ஒரு சிக்ஸரை கூட அவர் அடிக்கவில்லை. இருப்பினும் நடப்புத் தொடரில் அதிக ரன் எடுத்த வீரர்களின் வரிசையில் டேவிட் வார்னர் 2-வது இடத்தில் இருக்கிறார். மேலும் ஐபிஎல்லில் 6,000 ரன்களை வேகமாக எட்டிய வீரர் என்ற சாதனையை படைத்திருக்கும் வார்னர், கேப்டனாக வேகமாக 3,000 ரன்கள் அடித்த வீரர் என்ற சாதனையையும் தன்வசமாக்கி உள்ளார்.

இந்த நிலையில் டேவிட் வார்னரின் ஃபார்ம் குறித்து பேசியிருக்கும் டில்லி கேப்பிடல்ஸ் அணியின் உதவிப் பயிற்சியாளர் ஷேன் வாட்சன், ''நிச்சயமாக வார்னர் பேட்டிங் செய்த போது அச்சமில்லா மைண்ட் செட் தான் இருந்தது. கடந்த காலங்களில் சிக்ஸர், பவுண்டரி விளாசிய அதேபோன்ற பந்துகளை தற்போது அவர் மிஸ் செய்கிறார். அதேபோல் சில பந்துகளை அடித்து விளையாடவும் தவறுகிறார். ஆனால், இவையெல்லாம் டெக்னிகல் சைட் தான். அதனை சரி செய்ய பயிற்சி எடுத்து வருகிறோம். ஒரு பயிற்சியாளராக அது என்னுடைய பணிகளில் ஒன்று.

அவருடன் இணைந்து பேட்டிங் செய்த, இணைந்து விளையாட காலத்தில் இருந்து அவரைப் பற்றி எனக்கு நன்றாக தெரியும். அவரிடம் இருக்கும் ஒன்று இரண்டு சிக்கல்களை அடுத்த சில போட்டிகளில் சரிசெய்துவிடுவார். அது நடக்கவில்லை என்றால் என்னை தான் துளைத்துவிடுவார்கள்.

ஐபிஎல் கிரிக்கெட் கேரியரில் வார்னரின் பேட்டிங் பேட்டிங் ஸ்ட்ரைக் ரேட் 140. ஐபிஎல் வரலாறு முழுவதும் அவர் சிறந்த வீரராகவே இருந்து வருகிறார்'' என்றார்.