நடந்து முடிந்த 2023 ஐபிஎல் தொடரை மொபைல் பயனர்களும் ரீச்சார்ஜ் செய்யாமல் இலவசமாக பார்க்கலாம் என்ற அறிவிப்பை வெளியிட்டு அனைத்து கிரிக்கெட் ரசிகர்களையும் கட்டிப்போட்டது ஜியோ சினிமா. அதன் பலனாய் ஒரே நேரத்தில் ஜியோ சினிமாவின் பார்வையாளர்களின் எண்ணிக்கையானது 4 கோடி மற்றும் 3 கோடி முதலிய வியூர்களை பெற்று அசத்தியிருந்தது. அதுமட்டுமல்லாமல் ஒட்டுமொத்தமாக OTT தளத்தில் ஐபிஎல்லில் 44.9 கோடி பார்வையாளர்களை எட்டி சாதனை படைத்ததாக ஜியோ சினிமா அறிவித்தது.
இந்நிலையில், ஐபிஎல் உரிமத்தை ஜியோ சினிமாவிடம் இழந்த டிஸ்னி+ஹாட்ஸ்டார், தற்போது ஒரு நாள் உலகக்கோப்பைக்காக ஜியோ சினிமாவின் பார்முலாவையே கையில் எடுத்துள்ளது. அதன்படி தற்போது அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருக்கும் டிஸ்னி+ஹாட்ஸ்டார், “இந்த வருட இறுதியில் செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் நடைபெறவிருக்கும், ஆசிய கோப்பை மற்றும் ஒரு நாள் உலகக்கோப்பை தொடர்களை மொபைல் பயன்பாட்டாளர்கள் கட்டணம் செலுத்தாமல் இலவசமாக பார்க்கலாம்” என்று அறிவித்துள்ளது.
டிஸ்னி+ஹாட்ஸ்டார் அறிவித்திருக்கும் அதிகாரப்பூர்வ வெளியீட்டின்படி, டிஸ்னி+ ஹாட்ஸ்டாரை இலவசமாக்குவதற்கான முடிவு என்பது "கிரிக்கெட் விளையாட்டை ஜனநாயகப்படுத்துவதை" நோக்கமாகக் கொண்டுள்ளது. இதன் மூலம், கிரிக்கெட் மற்றும் டிஸ்னி+ ஹாட்ஸ்டார், ஸ்ட்ரீமிங் தளம் ஆகிய இரண்டையும் முடிந்தவரை இந்தியாவில் உள்ள மொபைல் பயனர்களுக்கு அணுகக்கூடியதாக மாற்றவும் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
இதுகுறித்து அறிக்கையில் தெரிவித்திருக்கும் Disney+ Hotstar தலைவர் சஜித் சிவானந்தன், “பார்வையாளர்களின் அனுபவத்தைத் தொடர்ந்து மேம்படுத்துவதற்காக நாங்கள் அறிமுகப்படுத்தியிருக்கும் இந்த இலவச அணுகுமுறை, எங்களுடன் இணைந்துள்ள மொத்த பார்வையாளர்களையும் மகிழ்விக்கும் என்று நம்புகிறோம். ஆசிய கோப்பை மற்றும் ஐசிசி ஆண்கள் கிரிக்கெட் உலகக் கோப்பை இரண்டையும் அனைத்து பார்வையாளர்களுக்கும் கிடைக்கச் செய்வதால், எங்களுடைய ஒட்டுமொத்த சுற்றுச்சூழலையும் வளர்க்க முடியும் என்று நாங்கள் நம்புகிறோம்” என்று தெரிவித்துள்ளார்.
டிஸ்னி+ஹாட்ஸ்டாரின் இந்த அறிவிப்பானது 2023 ஐபிஎல்லில் ஜியோ சினிமா அறிவித்த இலவச அணுகலை பின்தொடர்கிறது. சமீபத்தில் முடிவடைந்த IPL-ன் போது, ஜியோ சினிமாவின் இலவச ஸ்ட்ரீமிங்கால் அதன் தளத்திற்கு பெரிய வரவேற்பை ஏற்படுத்திக்கொடுத்தது.
டிஜிட்டல் உரிமைகளுக்கான போட்டியில் ஜியோ சினிமாவிடம் ஸ்ட்ரீமிங் உரிமையை இழந்தது டிஸ்னி+ஹாட்ஸ்டார். ஐபிஎல் 2023 இலவச அணுகலை பயன்படுத்தி, ஜியோசினிமா OTT தளமானது 44.9 கோடி பார்வையாளர்களை எட்டி சாதனை படைத்ததாக அறிவித்தது.
அதுமட்டுமல்லாமல் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் இடையேயான இறுதிப் போட்டியில், ஜியோசினிமாவில் ஒரே நேரத்தில் பார்வையாளர்களின் எண்ணிக்கை 3.2 கோடியாக இருந்தது. அதே நேரத்தில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் சிஎஸ்கே இடையேயான முதல் தகுதிச் சுற்றில் 2.5 கோடியாக இருந்தது. தனிப்பட்ட வீரர்கள் விளையாடும் போது குறிப்பிட்ட சில நேரம், 4 கோடியையும் எட்டி சாதனை படைத்திருந்தது ஜியோ சினிமா.
Bobble AI-ன் சமீபத்திய கணக்கெடுப்பின்படி, IPL-ன் போது JioCinema ரீச் என்பது 4 மடங்கு அதிகரிப்பு ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி அதன் ரீச் என்பது 3 சதவீதத்தில் இருந்து, 40.26 சதவீதமாக உயர்ந்துள்ளது. அந்த குறிப்பிட்ட காலகட்டத்தில் மொத்த இந்திய இணைய ஸ்மார்ட்போன் மக்கள்தொகையையும் கட்டிப்போட்டிருந்தது ஜியோ சினிமா.
இந்த 2023 ஐபிஎலை ஒப்பிட்டு பார்த்தால், டிஸ்னி+ஹாட்ஸ்டார் ஒளிபரப்பிய 2022 ஐபிஎல்லில் வெறும் 3.5 சதவீதம் மட்டுமே ரீச்சை பெற்றிருந்தது டிஸ்னி+ஹாட்ஸ்டார். இந்நிலையில் ஜியோ சினிமாவின் ஃபார்முலாவை, டிஸ்னி+ஹாட்ஸ்டார் கையில் எடுத்திருப்பதாக கூறப்படுகிறது.