கேரளாவில் நெய்யார் அணை செல்லும் சாலையில் பைக் ரேசிங்கில் ஈடுபட்ட இளைஞரொருவர் மோசமாக விபத்துக்குள்ளாகியுள்ளார்.
கேரள மாநிலம் திருவனந்தபுரம் மாவட்டத்தில் நெய்யார் அணைக்கு செல்லும் மலையோர சாலையில் நேற்று சில இளைஞர்கள் பைக் ரேஸ் நடத்தியுள்ளனர். அப்போது அந்த பகுதியை சேர்ந்த இருவர் இருசக்கர வாகனத்தில் அங்கு வந்துள்ளனர். அவர்கள் பைக் ரேசிங் நடப்பது பற்றி அறியாமல், எப்போதும் போல இயல்பாக வந்துள்ளனர். இதனால் திடீரென ரேசிங்கிலிருந்து வந்த ஒரு பைக் மீது இவர்கள் கடுமையாக மோதி, விபத்து ஏற்பட்டுள்ளது. விபத்தில், ரேசிங் செய்துகொண்டிருந்த இளைஞரின் பைக் அவரின் கால்களிடையே சிக்கிக்கொண்டது.
பின்வந்த இருவரும் ஓரளவு பேலன்ஸ் செய்து பைக்கிலிருந்து இறங்கியுள்ளனர். பைக்கிலிருந்து இறங்கிய அவர்கள், விபத்துக்குள்ளான ரேசிங் செய்த இளைஞரையும் அந்தப் பகுதியிலிருந்த அவரின் பிற நண்பர்களையும் சரமாரியாக தாக்கினர். ரேசிங் செய்வதை வீடியோ எடுத்துக்கொண்டிருந்த இளைஞரின் நண்பர்கள், விபத்துக்காட்சிக்களையும் அதன்பின் நடந்த சம்பவங்களையும் தங்களின் வீடியோவில் பதிவு செய்திருக்கின்றனர்.
அந்த வீடியோவில் விபத்தின்போது முன் சென்றுக்கொண்டிருந்த இளைஞரின் கால், பின்வந்த பைக் மோதியவுடன் ஒடிந்து தொங்கும் காட்சி பதிவாகியுள்ளது. வீடியோவில் அந்த இளைஞர் தனது கால் ஒடிந்ததாக கூறுவதையும் காணமுடிகிறது. இருந்தும் மக்கள் அவரை தொடர்ந்து தாக்கி வருகின்றனர். பின்னர் கால் ஒடிந்ததை தெரிந்த பின், மக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
இதை தொடர்ந்து இளைஞரின் சக நண்பர்கள், காயமடைந்த இளைஞரை மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். தற்போது இந்த வீடியோ, சமூக வலைதளங்களில் வேகமாக பரவிவருகின்றது. இந்த காட்சி சமூக வலைதளங்களில் பரவியதை தொடர்ந்து, இவ்விபத்து குறித்து தகவல் தெரிந்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நெய்யார் பகுதியில் இதுபோல் பைக் ரேஸிங் நடப்பதாக பல முறை புகார் அளித்துள்ளதாகவும், காவல்துறை நடவடிக்கை எடுக்காமல் இருந்ததே இந்த விபரீதத்துக்கான தொடக்கப்புள்ளி என்றும் அங்குள்ள பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.