வீடியோ ஸ்டோரி

புதுச்சேரியில் தேசிய ஜனநாயக கூட்டணி வென்றால் யார் முதல்வர்? - கேள்விக்கு விடை தராத பாஜக

EllusamyKarthik

புதுச்சேரியில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் முதல்வர் வேட்பாளர் யார் என்பது குறித்த சர்ச்சையும், கேள்விகளும் இன்னும் நீடிக்கின்றன. முதல்வர் யார் என்பதை கூட்டணி கட்சிகள் முடிவு செய்வார்கள் என்று கூறிய நிலையில், தான் தான் முதலமைச்சர் என்று ரங்கசாமி தெரிவித்துள்ளார்.

புதுச்சேரி தேசிய ஜனநாயகக் கூட்டணியில் ரங்கசாமியின் என்.ஆர் காங்கிரஸ் கட்சி இணைந்து தொகுதி பங்கீடு உறுதி செய்யப்பட்ட பின், முதலமைச்சர் யார் என்பதை கூட்டணி கட்சிகள் இணைந்து முடிவெடுக்கும் என்று பாஜக தெரிவித்திருந்தது. ஆனால், தங்கள் கூட்டணி வென்றால் தான்தான் முதலமைச்சர் என ரங்கசாமி பரப்புரைகள்தோறும் கூறிவருகிறார். 

இதற்கிடையில் புதுச்சேரியில் பரப்புரை செய்த பிரதமர் மோடி, தங்கள் கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் யார் என்பதை ஏன் அறிவிக்கவில்லை என முன்னாள் முதல்வர் நாராயணசாமி கேள்வி எழுப்பியிருந்தார். இது குறித்து பாஜக மேலிட பொறுப்பாளர் நிர்மல் குமாரிடம் செய்தியாளர்கள் கேட்டதற்கு, முதலமைச்சர் யார் என்பதை கூட்டணி கட்சி தலைவர்கள் கூடி முடிவு செய்வார்கள் என தெரிவித்தார்.

நிர்மல்குமார் சுரானா கூறிய ஒரு சில மணி நேரங்களில் பரப்புரைக்கு வந்த ரங்கசாமி தான் தான் முதலமைச்சர் என்று மீண்டும் உறுதிபட தெரிவித்துள்ளார்.

வாக்குப்பதிவு நாள் நெருங்கிவிட்ட நிலையில், தேசிய ஜனநாயகக் கூட்டணியில் முதல்வர் வேட்பாளர் யார் என்பது இன்னும் சர்ச்சையாகவே நீடித்து வருகிறது.