வீடியோ ஸ்டோரி

இந்தியாவில் அதிகரிக்கும் இயற்கை சீற்றங்கள் - மத்திய அரசின் புள்ளிவிவரங்கள்

இந்தியாவில் அதிகரிக்கும் இயற்கை சீற்றங்கள் - மத்திய அரசின் புள்ளிவிவரங்கள்

Sinekadhara

இந்தியாவில் கடந்த சில ஆண்டுகளாக புயல், பெருமழை உள்ளிட்ட இயற்கை சீற்றங்கள் அதிகரித்து வருவது மத்திய அரசு வெளியிட்டுள்ள புள்ளிவிபரங்கள் மூலம் தெரியவந்துள்ளது.

புயல்: இந்தியாவில் கடந்த 2016-ஆம் ஆண்டு ஏற்பட்ட மொத்த புயலின் எண்ணிக்கை நான்கு.  2017-ல் மூன்றாக இருந்த இந்த எண்ணிக்கை, 2018-ஆம் ஆண்டு 7ஆக உயர்ந்தது. அது 2019-ஆம் ஆண்டு 8 ஆக அதிகரித்தது. மிக மோசமான விளைவுகளை ஏற்படுத்திய புயல்களின் எண்ணிக்கையை பொறுத்தவரை 2016-ஆம் ஆண்டு ஒன்றே ஒன்று. 2017-இல் 2. மற்றும் 2018 மற்றும் 19-ஆம் ஆண்டுகளில் தலா 6 ஆக உயர்ந்தது.

கனமழை: மிக அதிக கனமழையை பொறுத்தவரை 2016-ஆம் ஆண்டு 1,864ஆக இருந்த நிலையில், 2018-இல் எண்ணிக்கை 2,181 ஆக உயர்ந்தது. 2019-ஆம் ஆண்டு மிக மோசமான மழை எண்ணிக்கை 3,056 ஆக அதிகரித்தது. கடந்த ஆண்டு சற்றே குறைந்து 1,912 ஆக இருந்தது.

மிகமிக அதிக கனமழை எண்ணிக்கையைப் பொறுத்தவரை 2016-ஆம் ஆண்டு 226 ஆக இருந்த நிலையில், 2017-ஆம் ஆண்டு 261 ஆக உயர்ந்தது. 2018-இல் 321 ஆக அதிகரித்து, 2019-ஆம் ஆண்டு இரட்டிப்பாகி 554 என்ற எண்ணிக்கையை தொட்டது. அதே நேரம் 2020-இல் இந்த எண்ணிக்கை 341 ஆக குறைந்தது.

2000-ஆவது ஆண்டிலிருந்து கணக்கிட்டால் இருபது ஆண்டுகளில் புயல் மற்றும் கனமழைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதற்கு, உலக அளவில் வெப்பமயமாதல், சுற்றுச்சூழல் மாறுபாடு, இந்தியப் பெருங்கடல் மற்றும் இமயமலைத் தொடர்களில் ஏற்படக்கூடிய பருவநிலை மாற்றங்கள் ஆகியவை பொது காரணங்களாக கூறப்படுகின்றன.

உத்தராகண்ட் நிலச்சரிவு, கேரள பெருவெள்ளம், தற்போது மகாராஷ்டிராவை தத்தளிக்க செய்துள்ள கனமழை உள்ளிட்டவை எல்லாம் இவற்றின் நீட்சிதான் என்றும், வரும் காலங்களில் சுற்றுச்சூழல் மாறுபாடு காரணமாக மோசமான விளைவுகள் ஏற்படலாம் எனவும் இயற்கை ஆர்வலர்கள் எச்சரிக்கின்றனர்.