வீடியோ ஸ்டோரி

ஐ.நா காலநிலை உச்சி மாநாட்டில் ஒப்பந்தம் - புவி வெப்பத்தை குறைக்க முடியுமா?

ஐ.நா காலநிலை உச்சி மாநாட்டில் ஒப்பந்தம் - புவி வெப்பத்தை குறைக்க முடியுமா?

கலிலுல்லா

புவியை அச்சுறுத்தி வரும் ஆபத்தான காலநிலை மாற்றத்தை கட்டுப்படுத்துவது தொடர்பாக ஐ.நா காலநிலை உச்சி மாநாட்டில் ஒப்பந்தம் நிறைவேறியது. இந்த ஒப்பந்தத்தில் சொல்லப்பட்டிருப்பது என்ன? புவி வெப்பத்தை குறைக்க முடியுமா? பார்ப்போம்.

பிரிட்டனின் கிளாஸ்கோ நகரில் COP26 என்ற பெயரில் ஐக்கிய நாடுகள் சபையின் காலநிலை உச்சி மாநாடு கடந்த இரண்டு வாரங்களாக நடைபெற்றது. இந்த மாநாட்டின் இறுதியில் கால நிலை மாற்றத்தை கட்டுப்படுத்துவது குறித்து ஒப்பந்தம் நிறைவேறியது. முதலில் படிப்படியாக நிலக்கரி பயன்பாட்டை முடிவுக்குக் கொண்டுவருவது என்று முடிவெடுக்கப்பட்டு இருந்தது. ஆனால் இந்தியா தலைமையில் வளரும் நாடுகள் இதற்கு கடும் எதிர்ப்புகளை பதிவு செய்தன.

குறிப்பாக நிலக்கரி திட்டங்களுக்கான மானியங்களை வழங்குவதை அரசுகள் நிறுத்த வேண்டும் என ஒப்பந்தத்தில் தெரிவிக்கப்பட்டிருப்பது, பொருளாதாரத்தில் முன்னேறி வரக்கூடிய நாடுகளுக்கு பெரும் சவாலான விஷயம் என எதிர்ப்பு பதிவு செய்யப்பட்டது. இதனை அடுத்து ஒப்பந்தத்தில் பல மாற்றங்கள் கொண்டுவரப்பட்டன. படிப்படியாக நிலக்கரி பயன்பாட்டை முடிவுக்குக் கொண்டுவருவது என்பதற்கு பதிலாக படிப்படியாக நிலக்கரி பயன்பாட்டை குறைப்பது என்ற நிலைப்பாடு எட்டப்பட்டது.

ஆனால் காலநிலை மாற்றத்தை கட்டுப்படுத்துவது என்ற மிகப்பெரிய சவாலை எதிர்கொள்வதற்கு இந்த திருத்தம் தடைக்கல்லாக தான் இருக்கும் என உலகளாவிய சமூக செயற்பாட்டாளர்கள் தெரிவித்தனர். அதே நேரத்தில் நிலக்கரி பயன்பாட்டை படிப்படியாகக் குறைப்பது என்று உலக நாடுகள் ஒருமித்த குரலில் முடிவெடுத்திருப்பது வரவேற்கத்தக்கது என பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் தெரிவித்தார்.

கார்பன் உமிழ்வை பெரிய அளவில் குறைப்பதை சாத்தியப்படுத்து குறித்து உறுதியான முடிவை எடுக்க அடுத்த ஆண்டு மீண்டும் உச்சி மாநாடு கூட்ட வேண்டும் என்று ஒப்பந்தத்தில் கூறப்பட்டிருப்பது முக்கிய அம்சமாக பார்க்கப்படுகிறது. மறுபுறம் கார்பனின் வெளிப்பாடு நிகர பூஜ்ஜியத்தை எட்டுவதற்கு தற்போது உலக நாடுகளால் முன்னெடுக்கப்பட்டுள்ள இந்த மென்மையான போக்கு பயன்படாது என்றும் புவி வெப்பத்தை 2030ஆம் ஆண்டிற்குள் 1.5 டிகிரிக்கு குறைக்க வேண்டும் என்ற இலக்கினை அடைவது என்பது மிகவும் சிரமம் என்றும் இயற்கை ஆர்வலர்கள் கூறுகின்றனர்.