மேட்டுப்பாளையம் அருகே அரசு பேருந்து மீது சரக்கு லாரி மோதி விபத்து ஏற்பட்டதில், பேருந்து கவிழ்ந்து எட்டு பேர் பலத்த காயப்பட்டுள்ளனர்.
மேட்டுப்பாளையத்தில் இருந்து சத்தியமங்கலம் செல்லும் அரசு பேருந்து இன்று காலை 20 பயணிகளுடன் சிறுமுகை சாலையில் சென்று கொண்டிருந்தது. நிதானமான வேகத்துடன் சென்ற அரசு பேருந்து, ஆலாங்கொம்பு என்ற மிடத்தை கடந்து சென்ற போது அருகில் இருந்த கிளை சாலையில் இருந்து முக்கிய சாலைக்கு திரும்பிய தூத்துக்குடியில் இருந்து கரி கட்டைகளை ஏற்றி வந்த சரக்கு லாரியொன்றில் வேகமாக மோதியது. இதில் அரசு பேருந்து நிலை தடுமாறி சாலையோரம் கவிழ்ந்தது. கண்ணிமைக்கும் நேரத்தில் நடைபெற்ற இந்த பயங்கர விபத்தில் பேருந்தின் ஓட்டுனர் நடத்துனர் உள்பட எட்டு பேர் காயங்களுடன் உயிர் தப்பினர்.
லாரி மோதிய வேகத்தில், அரசு பேருந்து அப்படியே மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள சாலையோரம் இருந்த கடைகள் மீது சாய்ந்தது. அந்த நேரத்தில் சாலையில் யாரேனும் நடந்து சென்றிந்தாலோ அல்லது கடைகளின் முன்புறம் நின்றிந்தாலோ உயிரிழப்புகள் ஏற்பட்டிருக்கும். நல்வாய்ப்பாக இந்த விபத்தில் பேருந்தில் பயணம் செய்த எட்டு பேர் மட்டும் காயங்களுடன் உயிர் தப்பியுள்ளனர். காயமடைந்தவர்கள் உடனடியாக மீட்கபட்டு ஆம்புலன்ஸ் வாகனம் மூலம் மேட்டுப்பாளையம் அரசு மருத்துவனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டனர்.
இவ்விபத்து காரணமாக மேட்டுப்பாளையம் சிறுமுகை சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்ட காரணத்தால் மீட்பு வாகனம் கொண்டு வரப்பட்டு சாலையில் நின்றிருந்த சரக்கு லாரி மற்றும் கவிழ்ந்து கிடக்கும் பேருந்தை அகற்றும் பணி நடைபெற்றது. இவ்விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- இரா.சரவணபாபு
தொடர்புடைய செய்தி: ஊட்டி ஹெலிகாப்டர் விபத்து: எஞ்சிய பாகங்களை மீட்டபின் கிராமத்திலிருந்து வெளியேறியது ராணுவம்