நா. முத்துக்குமார் Twitter
வீடியோ ஸ்டோரி

”மழைவாசம் வருகின்ற நேரம் எல்லாம், உன் கவிதை வாசம் வருமல்லவா!” - நா.முத்துக்குமார் நினைவு நாள் இன்று!

முத்தான வரிகளின் மூலம் ரசிகர்களின் மனதோடு உரையாடிக் கொண்டிருப்பவர், பாடலாசிரியர் நா. முத்துக்குமார். மறைந்தாலும் மக்களின் மனதில் நினைவுகளாக கலந்திருக்கும் இந்த மகா கலைஞனுக்கு இன்று நினைவு நாள்.

PT WEB

செவி வழியே உணர்வுகளைத் தீண்டி உயிரைத் தொடும் பாடல்கள் எல்லாம் எத்தனை ஆண்டுகள் ஆனாலும் அழியா வரம் பெற்றிருக்கும்... அப்படி காலம் கடந்தாலும் கடந்த காலத்துக்கு நம்மை அழைத்துச் செல்வதுதான் நா. முத்துக்குமாரின் பாடல்கள்.

பட்டின் பட்டணமான காஞ்சிபுரம்தான், நா. முத்துக்குமார் எனும் பட்டாம்பூச்சியின் சொந்த ஊர்.. சரித்திரம் படைக்கும் கனவுகளோடு சென்னை வந்த சின்னஞ்சிறு இளைஞன், சினிமாவில் சரித்திரம் படைத்த கலைஞன் ஆன கதை கொஞ்சம் சுவாரஸ்யமானது.

தமிழ் இலக்கியத்தில் முதுகலைப் பட்டம் முடித்த நா.முத்துக்குமாருக்கு, சினிமா ஆசை தொற்றிக் கொண்டது. வாய்ப்பு தேடி அலைந்தபோது அவரை வாரி அணைத்துக் கொண்டார் கலையின் காதலன் பாலுமகேந்திரா..! அவரின் உதவியாளராக இணைந்தபின் பாடல் எழுதத் தொடங்கிய நா.முத்துக்குமார், பின்னாளில் தேசிய அங்கீகாரம் பெற்ற பாடலாசிரியராக உருவெடுத்தார்.

தொடக்க காலத்தில் கமர்ஷியல் ஹிட்களை கொடுத்துவந்த முத்துக்குமாரின் வரிகளுக்கு, வெளிச்சத்தை கூட்டியது இளையராஜாவின் இசை. ஜூலி கணபதி படத்தில் இடம்பெற்ற ”எனக்கு பிடித்த பாடல் “இப்பாடல் இளையராஜா- நா.முத்துக்குமாரின் கூட்டணியில் என்றென்றைக்கும் ரசிக்க வைக்கும் படைப்பு.

ராஜாவுடனான கூட்டணிக்குப்பின் யுவன்ஷங்கர் ராஜாவுடன் கைகோர்த்தார், நா.முத்துக்குமார்.. யுவன் - செல்வராகவன் - நா.முத்துக்குமாரின் காதல் காம்போ, தமிழ் சினிமாவில் தனித்துவ அடையாளத்தைப் பெற்றது.

இவர்கள் இணைந்து கொடுக்கும் பாடல்கள் எல்லாம் ஹிட் பாடல்கள் என்றானது. இன்னிசை இளவரசன் யுவனுடன் ஒரு ஹிட் என்றால், இசைப்புயலுடன் மற்றொரு ஹிட் என, திரைக்கடலில் நிற்காமல் நகர்ந்து கொண்டிருந்தது நா.முத்துக்குமாரின் வெற்றிப் படகு..!

வாழ்வின் நிகழ்வுகளை எல்லாம் பாடல் வரிகளுக்குள் கொண்டுவந்து நினைவுகளாக்குவது, நா. முத்துக்குமாரின் ஸ்பெஷல்.. அதற்கு வெயில் படத்தில் இடம்பெற்ற ”வெயிலோடு உறவாடி வெளியிலோடு விளையாடி” மிகச் சிறந்த உதாரணம்..

வெயில்

இதுமட்டுமல்ல சிவாஜி படத்தில் வரும் பல்லேலக்கா பாடலில், அய்யனாரிடம் கத்தி வாங்கி பென்சில் சீவச் சொல்லியிருப்பார் இந்த கவிதைக்காரன்... மகிழ்ச்சியைப்போவே, மனதை கரைக்கும் வலிமை நா. முத்துக்குமாரி வரிகளுக்கு உண்டு... அப்படி மதராசபட்டிணம் திரைப்படத்தில் ஜி.வி.பிரகாஷ் இசையில், நா.முத்துக்குமாரின் வரிகள் பூப்பூத்திரிக்கும்.. இப்பாடல்களின் வரிசையில், உலகை விட்டு பிரிந்தாலும் மனதைவிட்டு பிரியாத காதலிக்காக அவர் எழுதிய இந்த பாடல்,

கேட்பவர்களை கண்ணீர் சிந்த வைக்கும் ஹிட் வரிசை.. தமிழ் சினிமாவில் அம்மா செண்டிமெண்டுக்கு ஆயிரம் பாடல்கள் உள்ளன.. ஆனால், குடும்பத்தின் தியாகத் தலைவர்களாக இருக்கும் அப்பாக்களின் வலிகளையும் பெருமைகளையும், பாடல்களாக்கியதில், இவருக்கு முக்கிய பங்கு உண்டு.. வாழ்வில் மனிதர்கள் எதிர்கொள்ளும் அனைத்துவிதமான சூழல்களுக்கும் இவரிடம் வரிகள் உண்டு.

அந்த பொன்னான வரிகளுக்காக தங்க மீன்கள், சைவம் உள்ளிட்ட திரைப்படத்துக்காக நா. முத்துக்குமாருக்கு தேசிய விருது கிடைத்தது. தமிழ் சினிமாவுக்கு முக்கியமான படைப்புகளை கொடுத்த நா.முத்துக்குமார், வெகு விரைவிவாக நம்மை விட்டு பிரிந்த நிகழ்வு ஒரு கொடுந்துயரம். சினிமாவில் ஆண்டொண்டுற்றுக்கு ஆயிரம் ஆயிரம் பாடல்கள் வெளியானாலும், கால ஓட்டத்தில் கரைந்து போகாமல், கலங்கரை விளக்கமாக ஒளிவீசிக் கொண்டிருக்கிறது, நா.முத்துக்குமாரின் பாடல்கள். வரிகளால் வாழ்க்கை பயணத்தை இலகுவாக்கும் இந்த பாட்டுக்காரன், தமிழ் சினிமாவுக்கு கிடைத்த தனித்துவக் கலைஞன்...!