உதயநிதி ஸ்டாலினின் உதவியாளர் எனக்கூறி மோசடியில் ஈடுபட்ட நபரை திருப்பத்தூர் மாவட்ட போலீசார் கைது செய்துள்ளனர்.
திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட செவ்வாத்தூர் புதூர் கிராமத்தைச் சேர்ந்தவர் தேன்மொழி (33). இவர் சென்னையில் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்த போது, கடந்த 2018-ம் ஆண்டு அரசு வேலை வாங்கி தருவதாகக் கூறி சென்னையை சேர்ந்த ராஜேஷ் என்பவர் பல தவணைகளாக ரு.4,50,000 பணம் பெற்று மோசடி செய்துள்ளார்.
இந்நிலையில், தேன்மொழி, ராஜேஷ் என்பவரிடம் பணம் தொடர்பாக மீண்டும் மீண்டும் தொலைபேசியில் பேசியபோது ராஜேஷ் தான் உதயநிதி ஸ்டாலினின் நேர்முக உதவியாளர் என்று ஏமாற்றியதோடு தன்னை ஒன்றும் செய்ய முடியாது; தான் நினைத்தால் உன்நிலை அவ்வளவுதான் என்று மிரட்டியுள்ளார்.
மேற்படி உரையாடல் பல்வேறு வலைதளங்களில் வைரலானதை அடுத்து பாதிக்கப்பட்ட தேன்மொழி, கந்திலி காவல் நிலையத்தில் புகார் மனு அளித்ததின் பேரில் ராஜேஷ் என்பவரின் மீது கந்திலி காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து கைது செய்து முதற்கட்ட விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் ராஜேஷ் எந்த கட்சியையும் சார்ந்தவர் அல்ல என்பதும், உதயநிதி ஸ்டாலினின் நேர்முக உதவியாளரும் இல்லை என்பதும் தெரியவந்தது. இதையடுத்து பண மோசடி குற்றத்தில் இருந்து தன்னை காபாற்றிக்கொள்ள ராஜேஷ் ஆள்மாறாட்டத்தில் ஈடுபட்டுள்ளார். எனவே இவர் மோசடி, ஆள்மாறாட்டம் மற்றும் மிரட்டல் விடுத்தது ஆகிய குற்றங்களுக்காக கைது செய்யப்பட்டுள்ளார்.