அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும் திட்டத்தின் கீழ் பணி நியமனம் செய்யப்பட்டவரை, கோயில் காவலாளி சாதிப் பெயரைச் சொல்லி திட்டி மிரட்டுவதாக திருச்சி சமயபுரம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த மகேஸ்குமார், அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும் திட்டத்தின் கீழ் திருச்சி - சமயபுரம் மாரியம்மன் கோயிலின் உப கோயிலான முக்தீஸ்வரர் கோயிலில் அர்ச்சகராக நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த ஆகஸ்ட் மாதம் முதலமைச்சரிடம் நேரடியாக பணி ஆணை பெற்ற மகேஸ்குமார், சமயபுரம் மாரியம்மன் கோயில் குடியிருப்பு வளாகத்தில் வசித்து வருகிறார்.
கோயிலின் காவலாளி வரதன், தன்னை சாதிப் பெயரைச் சொல்லி திட்டி அர்ச்சகர் பணியிலிருந்து விலகிடுமாறு மிரட்டுவதாக சமயபுரம் கோயில் இணை ஆணையரிடமும் காவல்துறையிலும் புகார் அளித்ததாக மகேஸ்குமார் கூறினார்.
இந்நிலையில் நேற்றிரவு காவலாளி வரதன் மதுபோதையில் தனது வீட்டுக்குள் நுழைந்து மீண்டும் கொலை மிரட்டல் விடுத்ததாக சமயபுரம் காவல் நிலையத்தில் மகேஸ்குமார் புகார் அளித்துள்ளார். தனக்கும் தனது மனைவிக்கும் பாதுகாப்பு அளிக்குமாறு புகாரில் கேட்டுக் கொண்டுள்ளார். இதுபற்றி கோயில் இணை ஆணையரிடம் கேட்டபோது, கோயில் காவலாளி வரதனிடம் விளக்கம் கேட்டுள்ளதாகத் தெரிவித்தார்