வீடியோ ஸ்டோரி

’’உருவக் கேலிகளை அதிகம் சந்திப்பது பெண்களே; நானும் சந்தித்திருக்கிறேன்’’ - தமிழிசை

’’உருவக் கேலிகளை அதிகம் சந்திப்பது பெண்களே; நானும் சந்தித்திருக்கிறேன்’’ - தமிழிசை

Sinekadhara

உருவத்தை வைத்து கேலி செய்யும்போது யாராலும் உடைந்து போகாமல் இருக்க முடிவதில்லை. உருவக்கேலியால் பாதிக்கப்பட்ட பலரும் தங்களுடைய வருத்தங்களைப் பதிவு செய்திருக்கிறார்கள். இதுகுறித்து புதிய தலைமுறை நியூஸ் 360யில் முன்வைக்கப்பட்ட கருத்துக்களை பார்க்கலாம்.

இன்று பிரபலமாக இருக்கும் நகைச்சுவை நடிகர் யோகி பாபு தான் வாய்ப்புத்தேடி அலைந்த சமயத்தில் உருவக் கேலிக்கு ஆளானதாகக் கூறியுள்ளார். உனக்கெல்லாம் சினிமா ஆசை ஏன், உன் முகத்தை கண்ணாடியில் பார்த்தில்லையா என்றெல்லாம் விமர்சனங்களை எதிர்கொண்டதாகக் கூறியுள்ளார் யோகி பாபு. ஒரு படத்துக்காக நான் எடை கூடினேன். ஆனால் இரக்கமே இல்லாமல் என்னை பலரும் கேலி செய்தார்கள் என்று நடிகர் சிலம்பரசன் ஒரு நிகழ்ச்சியில் வெளிப்படையாக குறிப்பிட்டார்.

இதேபோன்று காட்சிக்கு தேவை என்பதற்காக எடையை அதிகரித்த அனுஷ்கா உருவக் கேலிக்கு ஆளானார். தானும் உருவக் கேலிக்கு ஆளானதாக தெலங்கானா ஆளுநர் தமிழிசை செளந்திர ராஜனும் கூறியுள்ளார். பல்வேறு திரைப்படங்களில் குணச்சித்திர மற்றும் நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் நடிகை தீபாவும் இதுகுறித்த தன்னுடைய வருத்தத்தை பதிவு செய்திருக்கிறார். தொலைகாட்சியில் ஒளிபரப்பாகும் பல நிகழ்ச்சிகளில் உருவ கேலி அதிகரித்து வருவது சோகம் என்று நடிகை ஸ்ரீப்ரியா கூறியிருக்கிறார்.

பிரபல பாலிவுட் நடிகையான வித்யா பாலனும் உருவக்கேலி அவதூறுக்கு ஆளானதாக வேதனை தெரிவித்துள்ளார். தனது உடல் எடை தேசிய அளவில் விவாதப் பொருளாகிவிட்டதாகவும் அவர் நகைச்சுவையுடன் குறிப்பிட்டுள்ளார். தீபிகா படுகோன், சோனாக்சி சின்ஹா, ஜரீன் கான் உள்ளிட்டோரும் இது போன்ற அவமதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். உலக அழகியாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஐஸ்வர்யா ராயே கூட உருவக் கேலிக்கு ஆளாகியிருக்கிறார் என்பது வியப்பிற்குரிய செய்தி. ஐஸ்வர்யா ராய் கருவுற்றிருந்த போது அவரது உடல் எடை அதிகரித்துக்காணப்பட்டது. இதற்காக அவர் விமர்சனங்களை எதிர்கொண்டார்.

கிம் கர்தாஷியன், கேத் வின்ஸ்லெட் , ஓப்ரா வின்ஃப்ரே போன்ற சர்வதேச பிரபலங்களும் கூட தாங்களும் உருவக்கேலிக்கு ஆளாக்கப்பட்டதாக வேதனை தெரிவித்துள்ளனர். ஒருவரின் உருவத்தைப் பற்றி யார் கேலி செய்தாலும் அது அவருக்கு நிச்சயம் வருத்தம் தரும். ஒருவரின் திறமைக்குப் பின்னால் உருவக்கேலி பற்றிய விமர்சனங்கள் ஓரங்கட்டப்படும் என்றாலும்கூட அந்த வலியைக் கடந்து வருவது யாருக்கும் சற்று கடினமே.