கடுமையான பாதுகாப்புடன் இருந்த இலங்கை அதிபர் மாளிகை தற்போது சுற்றுலாத் தலம் போல் மாறியுள்ளது. உள்ளே நுழைந்துள்ள போராட்டக்காரர்கள் குழந்தைகளுடன் உணவருந்தி செல்ஃபி எடுத்து மகிழ்ந்தனர்.
இலங்கை வரலாற்றில் அதிபர் மாளிகை முற்றுகையிடப்பட்டு, அதிபர் ஒருவர் தப்பிச் செல்வது இதுவே முதல்முறை. வெளியே மக்கள் உணவுக்கு திண்டாட, மாளிகைக்கு உள்ளே அதிபர் வாழ்ந்து கொண்டிருந்த சொகுசுவாழ்க்கையை பார்த்து போராட்டக்காரர்கள் அதிர்ந்து போனார்கள். இதனால், அதிபர் மாளிகையையே போராட்டக்காரர்கள் சுற்றுலாத் தலம் போல் மாற்றியுள்ளனர். அங்குள்ள நீச்சல் குளத்தில் குளித்து மகிழ்கின்றனர்.
மாளிகைக்குள் நிறுத்தப்பட்டிருக்கும் சொகுசு கார்களுக்கு முன்னால் நின்று செல்ஃபி எடுத்துக் கொண்டனர். போராட்டக்காரர்கள் அங்கு போடப்பட்டுள்ள சோஃபாக்களில் அமர்ந்து பேசிக் கொண்டிருப்பதை பார்க்கும் போது, அதிபர் மாளிகை ஒரு ரிசார்ட் போல் காட்சி அளிக்கிறது. அங்கேயே உணவருந்தியும், குழந்தைகளுக்கு உணவுகளை ஊட்டியும் சுற்றுலா வந்தது போல் இருக்கின்றனர் மக்கள்.
படுக்கையறை மெத்தையில் மல்யுத்தம் விளையாடி நேரத்தை போக்குகின்றனர். அதே போல் நவீன வசதிகள் கொண்ட உடற்பயிற்சி கூடத்தில் போட்டி போட்டுக் கொண்டு உடற்பயிற்சி செய்கின்றனர். நாடெங்கும் மின்சாரம் இல்லாமல் மக்கள் திண்டாடி வரும் நிலையில் அதிபர் மாளிகையில் ஏராளமான குளிரூட்டும் இயந்திரங்கள் இயங்கிவாறு இருந்ததை பார்த்ததாக ஒருவர் தெரிவித்தார். பொதுமக்களால் அவ்வளவு எளிதில் நெருங்க முடியாத அளவுக்கு இருந்த இலங்கை அதிபர் மாளிகையின் நிலை தற்போது அதற்கு நேர் எதிராக மாறியுள்ளது.