வீடியோ ஸ்டோரி

முதல்வர் ஸ்டாலின் தலைமையில் சமூக நீதி நாள் உறுதிமொழி ஏற்பு

முதல்வர் ஸ்டாலின் தலைமையில் சமூக நீதி நாள் உறுதிமொழி ஏற்பு

கலிலுல்லா

தந்தை பெரியாரின் பிறந்த நாள் சமூக நீதி நாளாகக் கடைப்பிடிக்கப்படுவதை முன்னிட்டு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் உறுதியேற்பு நடைபெற்றது. தலைமைச் செயலக வளாகத்தில் உள்ள ராணுவ மைதானத்தில் நடைபெற்ற நிகழ்வில், தலைமைச் செயலாளர் இறையன்பு உள்ளிட்ட அதிகாரிகளும், ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரசு ஊழியர்களும் உறுதி மொழி ஏற்றுக் கொண்டனர்.

தந்தை பெரியாரின் 143 ஆவது பிறந்த நாளையொட்டி சமூக நீதி நாள் உறுதிமொழி ஏற்பு விழா நடைபெற்றது. முதலமைச்சர் தலைமையில் நடக்கும் உறுதிமொழி ஏற்பு நிகழ்வில் தலைமைச் செயலக பணியாளர்கள் பங்கேற்றனர். "பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற அன்பு நெறியை எனது வாழ்வியல் வழிமுறையாக கடைப்பிடிப்பேன்.யாதும் ஊரே யாவரும் கேளிர் எனும் பண்பு நெறியை எனது வாழ்வின் வழிமுறையாக கடைப்பிடிப்பேன்.

சுயமரியாதை, ஆளுமைத் திறனும், பகுத்தறிவுக் கூர்மைப் பார்வையும் கொண்டதாக எனது செயல்பாடுகள் அமையும்.சமத்துவம், சகோதரத்துவம், சமதர்மம் கொள்கைகளுக்காக என்னை நான் ஒப்படைத்துக் கொள்வேன்.

மானுடப் பற்றும் மனிதாபிமானமும் ஒன்றே எனது ரத்த ஓட்டமாக அமையும். சமூக நீதியையே அடித்தளமாக கொண்ட சமுதாயம் அமைக்கும் எனது பயணம் தொடர இந்த நாளில் உறுதியேற்கிறேன்" என்று முதலைமச்சர் ஸ்டாலின் உள்ளிட்டோர் உறுதி மொழி ஏற்றனர்.