வீடியோ ஸ்டோரி

சென்னைக்கு அருகில் சித்த மருத்துவ பல்கலைக்கழகம் : மானியக்கோரிக்கையில் அறிவிப்பு

Veeramani

இந்தியாவிலேயே முதல் முறையாக சென்னைக்கு அருகில் சித்த மருத்துவ பல்கலைக்கழகம் அமைக்கப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை மானியக்கோரிக்கையில், அமைச்சர் மா சுப்பிரமணியன் வெளியிட்ட அறிவிப்புகளின்படி, 15 ஆவது நிதி ஆணையம் தமிழ்நாட்டுக்கு வரும் ஐந்தாண்டுகளுக்கு பரிந்துரைத்துள்ள 4,280 கோடி ரூபாய் நிதியை பயன்படுத்தி வட்டார அளவிலான மருத்துவமனைகள் மற்றும் நகர்புறங்களில் உள்ள மருத்துவமனைகள் தரம் உயர்த்தப்படும் என்று தெரிவித்துள்ளார். இந்தியாவிலேயே முதல் முறையாக சென்னைக்கு அருகில் சித்த மருத்துவ பல்கலைக்கழகம் அமைக்கப்படும் என்றும் அமைச்சர் அறிவித்துள்ளார்.

மக்களைத் தேடி மருத்துவம் திட்டம் 258 கோடி ரூபாய் செலவில் தமிழ்நாடு முழுவதும் விரிவாக்கப்படும் என்றும், தொலைதூர கிராமங்களுக்கு மருத்துவ சேவையை வலுப்படுத்த 389 புதிய நடமாடும் மருத்துவ குழு வாகனங்கள் ரூபாய் 70 கோடி மதிப்பீட்டில் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.19 மாவட்டங்களில் அரசு மருத்துவமனைகள் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைகளாக மாற்றப்படும் என்று அமைச்சர் தெரிவித்துள்ளார். மேலும், கலைஞரின் வரும் முன் காப்போம் திட்டம் ஆண்டுக்கு 1,000 சிறப்பு மருத்துவ முகாம்கள் மூலம் மீண்டும் புதுப்பொலிவுடன் செயல்படுத்தப்படும் என்றும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.