திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் அருகே காரில் இருந்து 23 லட்சம் மதிப்பிலான கள்ள ரூபாய் நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. காரில் கொண்டு செல்லப்பட்ட பணத்தை பிடிக்க காவல் துறையினர் துரத்தி சென்ற பரபரப்பு காட்சிகள் வெளியாகியுள்ளன.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் பகுதியைச் சேர்ந்த பட்டுப்புடவை வியாபாரி கனகராஜ். இவருடைய காரை ஆம்பூர் அருகே வெங்கிலி பகுதியில் நேற்று முன்தினம் மறித்த அடையாளம் தெரியாத கும்பல், தங்களை காவல் துறையினர் எனக் கூறி ஒன்றரை லட்சம் ரூபாயை பறித்துச் சென்றதாகத் தெரிகிறது.
இதுகுறித்து கனகராஜ் அளித்த புகாரின் பேரில், ஆம்பூர் டிஎஸ்பி சரவணன் தலைமையிலான தனிப்படையினர் விசாரணையை தீவிரப்படுத்தினர். வழிப்பறியில் ஈடுபட்டதாக கூறப்படும் சொகுசு கார் பெங்களூரு - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில், காவல் துறையினர் அவர்களை துரத்திச் சென்றனர்.
ஆம்பூர் அடுத்த மாதனூர் பகுதியில் அந்த கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் உள்ள எம்.எம்.நகர் பகுதியில் சுவரில் மோதி விபத்துக்குள்ளானது. உடனடியாக காரில் இருந்தவர்களை சுற்றி வளைத்துப் பிடித்த காவல் துறையினர், அதிலிருந்த 23 லட்சம் மதிப்பிலான கள்ள ரூபாய் நோட்டுகளை பறிமுதல் செய்தனர்.
காரில் இருந்த பெருமாள், சீனிவாசன், சதிஷ் ஆகியோரை கைது செய்த காவல்துறை, அவர்களுக்கு துணையாக செயல்பட்ட சரத், சதிஷ், தினகரன் ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து ஒரு சொகுசு கார் மற்றும் 9 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும், வழிப்பறி நடைபெற்றதாக புகார் அளித்த கனகராஜிடமும் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.