Seeman pt desk
வீடியோ ஸ்டோரி

'அறிக்கை வெளியிட்ட 10 நிமிடத்தில் ட்விட்டர் ஐடி முடக்கம்; மீண்டும் அதை செய்வேன்' - சீமான் காட்டம்

எதிர் கருத்தே வரக்கூடாது என்பது எப்படி ஜனநாயகமாக இருக்கும் எனக் காட்டமாகப் பேசியுள்ளார் சீமான்.

Justindurai S

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மற்றும் நிர்வாகிகள் பாக்கியராசன், இடும்பாவனம் கார்த்தி உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட கட்சியின் முக்கிய நிர்வாகிகளின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்குகள் இந்தியாவில் தற்காலிகமாக தடை செய்யப்பட்டுள்ளது. அவர்களுடைய ட்விட்டர் பக்கத்திற்கு சென்றால், சட்டப்பூர்வ கோரிக்கையை ஏற்று கணக்கு முடக்கி வைக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இருப்பினும் முடக்கத்தின் பின்னணியில் உள்ள காரணம் என்ன? என்பது தெரியவில்லை.

இந்த நிலையில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாள சீமான், 'புதிய தலைமுறை'க்கு தொலைபேசி வாயிலாக அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:- '

'எதிர் கருத்தே வரக்கூடாது என்பது எப்படி ஜனநாயகமாக இருக்கும். நம் வீட்டுப் பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகி வீதியில் போராடுவதை கண்டு சகித்துக்கொண்டு இருக்க முடியுமா? உலக அரங்கில் இது பெரிய அவமானம் இல்லையா? அதன் காரணமாக என்னுடைய ட்விட்டர் கணக்கை முடக்கினால் எனக்கு அது மகிழ்ச்சிதான்; பெருமைதான். மறுபடியும் அதே அறிக்கையை ஆங்கிலத்தில் வெளியிடப் போகிறேன்.

சீமான் பேசிய முழு ஆடியோ இங்கே:-

இதனிடையே, சீமானின் ட்விட்டர் கணக்கு முடக்கப்பட்டதற்கு தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். ”நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் திரு. சீமான், மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் சகோதரர் திரு. திருமுருகன் காந்தி உள்ளிட்டோரது ட்விட்டர் கணக்குகள் இந்தியாவில் முடக்கப்பட்டிருப்பது கண்டனத்திற்குரியது. கருத்துகளை கருத்துகளால் எதிர்கொள்வதே அறம். கழுத்தை நெரிப்பது அல்ல. ட்விட்டர் முடக்கத்தை விலக்கி, சமூக வலைதளத்தை அதற்கான தரத்துடன் செயல்பட அனுமதிக்க வேண்டும்!” என்று தனது ட்விட்டரில் முதல்வர் குறிப்பிட்டுள்ளார்.