வீடியோ ஸ்டோரி

விழுப்புரம்: ஆட்டோ விபத்து - பேருந்தை தீ வைத்து கொளுத்திய உறவினர்கள்

விழுப்புரம்: ஆட்டோ விபத்து - பேருந்தை தீ வைத்து கொளுத்திய உறவினர்கள்

கலிலுல்லா

விழுப்புரத்தில் தனியார் பேருந்து ஆட்டோ மீது மோதிய விபத்தில் ஆட்டோ ஓட்டுனர் உயிரிழந்ததால் ஆத்திரமடைந்த அவரது உறவினர்கள், பேருந்தை அடித்து நொறுக்கி தீ வைத்து எரித்து சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

விழுப்புரம், மேட்டுத்தெரு ஊரல்கரைமேடு செல்லியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் ஆட்டோ ஓட்டுநர் அர்ஜூணன். இவர் சவாரிக்கு சென்று தனது ஆட்டோ நிறுத்தமான சவிதா தியேட்டர் எம்ஜிஆர் சிலை அருகே திரும்பியபோது, புதுச்சேரியிலிருந்து விழுப்புரம் நோக்கி வேகமாக வந்த தனியார் பேருந்து ,கண்ணிமைக்கும் நேரத்தில் அந்த ஆட்டோவின் மீது மோதியது. இதில் ஆட்டோவில் இருந்து நிலைதடுமாறி அர்ஜூணன் கீழே விழுந்ததில், பேருந்துவின் பின்சக்கரம் அவரது தலையில் ஏறியதில் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். விபத்து ஏற்படுத்திய தனியார் பேருந்து ஓட்டுனர் நடுரோட்டிலேயே பேருந்தினை நிறுத்தி விட்டு இறங்கி தப்பி ஓடிவிட்டார்.

விபத்து குறித்து தகவலறிந்து வந்த அர்ஜூணன் அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்ததை பார்த்து கதறி அழுத அவர்கள், ஆத்திரத்தில் தனியார் பேருந்து மீது கல்வீசி தாக்கியும், உருட்டுக்கட்டையாலும் அடித்து நொறுக்கினர். இதில் பேருந்தின் முன்பக்க, பின்பக்க கண்ணாடிகளும் மற்றும் ஜன்னல் கண்ணாடிகளும் உடைந்து நொறுங்கி சேதமடைந்ததோடு மட்டுமல்லால் உறவினர்கள் ஆத்திரம்  அடைந்து பெட்ரோலை ஊற்றி பேருந்திற்கு தீ வைத்து கொளுத்தினர். இதில் தீ கொழுந்து விட்டு எரிந்தது. இந்தச் சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த போலீசார் எரிந்துக்கொண்டிருந்த பஸ்சின் மீது தண்ணீரை ஊற்றி அணைக்க முயன்றனர்.

ஆனால் முடியாததால் உடனடியாக விழுப்புரம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தண்ணீரை பீய்ச்சியடித்து தீ பரவாமல் அணைத்தனர். இருப்பினும் பேருந்தின் பின்பக்க பகுதி தீயில் எரிந்து சேதமடைந்தது. பின்னர் விபத்தில் பலியான அர்ஜூணனின் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்ப முயன்றபோது அர்ஜூணனின் உறவினர்கள் மற்றும் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள், போலீசாரை தடுத்து நிறுத்தி அவர்களிடம் வாக்குவாதம் செய்து அர்ஜூணனின் உடலை நடுரோட்டிலேயே வைத்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதன் காரணமாக விழுப்புரம்- புதுச்சேரி சாலையில் வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்டது. உடனே அவர்களிடம் போலீசார் சமரச பேச்சுவார்த்தை நடத்தி விபத்தை ஏற்படுத்திய தனியார் பேருந்து ஓட்டுனரை கைதுசெய்து வேகமாக செல்லும் பேருந்துகளின் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தனர். இதனையடுத்து மறியலை கைவிட்டு சென்றனர். இச்சம்பவத்தால் விழுப்புரத்தில் பரபரப்பு ஏற்பட்டது.