வீடியோ ஸ்டோரி

கதிர் அறுக்கும் நேரத்தில் பெய்த மழை - டெல்டாவில் ஆயிரக்கணக்கான ஏக்கர் சம்பா நாசம்

கலிலுல்லா

பார்த்து பார்த்து வளர்த்த பயிர்கள் நீரில் படுத்துக் கிடப்பதை காண யாருக்குத் தான் மனம் வரும். கதிர் அறுக்கும் நேரத்தில் பெய்த மழை, டெல்டா மாவட்ட விவசாயிகளின் கண்களை ஈரமாக்கியுள்ளது.

தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, புதுக்கோட்டை மாவட்டங்களில் கடந்த 2 நாட்களுக்கு முன் பெய்த தொடர் கனமழையால் ஆயிரக்கணக்கான ஏக்கர் சம்பா நீரில் மூழ்கின. திருவாரூர் மாவட்டம் ஆலங்கோட்டை சுற்றுவட்டாரப் பகுதிகளில் 500 ஏக்கர் சம்பா பயிர்கள் மழைநீரில் மூழ்கின. வேளா வேளைக்கு தண்ணீர் பாய்ச்சி, உரமிட்டு, நோய் தாக்கா வண்ணம் பார்த்து பார்த்து வளர்த்த சம்பா பயிர்கள், செழித்து வளர்ந்து இருந்தன. திடீரென பெய்த கனமழை, விளை நிலங்களை புரட்டிப்போட்டுள்ளது.

பால் கட்டும் பருவத்தில் இருந்த நெற்கதிர்கள் மழையால் சாய்ந்து நீரில் மூழ்கின. கதிர்கள் முற்றாத நிலையில், மழை வடிந்த பின்னர் கதிர்களை அறுவடை செய்வது இயலாத காரியம் என விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர். உடனடியாக பயிர்களை ஆய்வு செய்த உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.