வீடியோ ஸ்டோரி

'நகைச்சுவை கலைஞர்' டூ பஞ்சாப் ஆம் ஆத்மி 'முதல்வர் வேட்பாளர்'.. - யார் இந்த பகவந்த் மான்?

'நகைச்சுவை கலைஞர்' டூ பஞ்சாப் ஆம் ஆத்மி 'முதல்வர் வேட்பாளர்'.. - யார் இந்த பகவந்த் மான்?

Veeramani

பஞ்சாப் மாநிலத்தில் ஆம் ஆத்மி கட்சி சார்பில் பகவந்த் மான் முதலமைச்சர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். நகைச்சுவை கலைஞராக இருந்து ஒரு மாநிலத்தின் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள பகவந்த் மான் பற்றி பார்க்கலாம்.

ஆம் ஆத்மியின் முதலமைச்சர் வேட்பாளர் யார் என்பதை தேர்ந்தெடுக்கும் பொறுப்பை மக்களிடமே விட்டிருந்தது அக்கட்சி. பொதுமக்கள் தேர்ந்தெடுத்து தந்ததாக ஆம் ஆத்மி கட்சி அறிவித்துள்ள பெயர்தான் பகவந்த் மான். நகைச்சுவை கலைஞராக தனது பொதுவாழ்க்கையில் அறியப்படுபவர் பகவந்த் மான். அரசியல், குடும்பம், விளையாட்டுத்துறை என எதையும் விட்டு வைக்காமல் நையாண்டி செய்யும் பகவந்த்மானின் நகைச்சுவை நிகழ்ச்சிகள் பஞ்சாப் மக்களிடம் பெறும் வரவேற்பை பெற்றவை. மேடை நகைச்சுவை நிகழ்ச்சிகளைத் தொடர்ந்து, தொலைக்காட்சிகளில் ரியாலிட்டி ஷோக்களிலும் பங்கேற்றுள்ளார்.

திரைப்படங்களில் நடித்து வந்த பகவந்த் மான், 2011 ஆம் ஆண்டு அரசியலில் காலடி எடுத்துவைத்தார். 2012 ல் லெகரே தொகுதியில் மக்கள் பஞ்சாப் கட்சி என்ற கட்சி சார்பில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். 2014ஆம் ஆண்டு ஆம் ஆத்மி கட்சியில் இணைந்து சங்ரூர் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இதே தொகுதியில் 2019ஆம் ஆண்டு போட்டியிட்டு பஞ்சாப் மாநிலத்தில் ஆம் ஆத்மி கட்சியின் ஒரேயொரு நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கிறார். இவரை தான் தற்போது ஆம் ஆத்மி கட்சி தங்கள் கட்சி சார்பில் பஞ்சாப் மாநிலத்தின் அதிகாரப்பூர்வமான முதல்வர் வேட்பாளராக அறிவித்துள்ளது.

நகைச்சுவைக்கு மட்டுமல்ல சர்ச்சைகளுக்கும் பெயர் போனவர் பகவந்த் மான். இவரது மதுப்பழக்கம் சர்ச்சைக்குள்ளான நிலையில், 2019 ல் ஒரு மேடையில், தான் மதுப்பழக்கத்தை கைவிட்டதாக அறிவித்தார். நாடாளுமன்றத்தில் உள்ள பாதுகாப்பு குறைபாடுகளை சுட்டிக்காட்டுவதாக கூறி, சோதனை நடைபெறும் முறைகளை செல்போனில் படம்பிடித்து சமூக ஊடகங்களில் வெளியிட்டதால் கூட்டத்தொடரில் இருந்து தற்காலிகமாக நீக்கம் செய்யப்பட்டிருந்தார். பஞ்சாப் முதல்வர் வேட்பாளராக ஆம் ஆத்மியால் முன்னிறுத்தப்பட்டுள்ள பகவந்த் மானுக்கு தேர்தல் களத்தில் கடும் சவால்கள் காத்திருக்கின்றன.