வீடியோ ஸ்டோரி

அருங்காட்சியமாக மாற்றப்பட்ட காவல் ஆணையர் அலுவலகம் - சிறப்புகள் என்ன?

அருங்காட்சியமாக மாற்றப்பட்ட காவல் ஆணையர் அலுவலகம் - சிறப்புகள் என்ன?

PT WEB

1870ஆம் ஆண்டு போலீஸார் பயன்படுத்திய சைக்கிள் தொடங்கி விடுதலைப்புலிகளிடமிருந்து கைப்பற்றப்பட்ட சிறு பீரங்கி வரை சென்னை காவல்துறை அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளன. சட்டப்பேரவை தேர்தலுக்கு முன்பே அருங்காட்சியகம் திறக்கப்பட்டாலும் கூட கொரோனா பரவல் காரணமாக மக்கள் இதுவரை அனுமதிக்கப்படவில்லை. அருங்காட்சியகத்தின் சிறப்புகள் குறித்து பார்ப்போம்.

பிரிட்டிஷ் ஆட்சியின் சான்றாக சென்னையில் இருக்கும் கட்டடங்களில் எழுப்பூர் காவல் ஆணையர் அலுவலக கட்டடமும் ஒன்று. 1856 முதல் 2013 வரை காவல் ஆணையர் அலுவலகம் இங்குதான் செயல்பட்டு வந்தது. 173 ஆண்டுகள் பழமையான இந்த கட்டடம் 5 கோடி ரூபாய் நிதியில் காவல்துறை அருங்காட்சியமாக மாற்றப்பட்டுள்ளது. இங்கு 1856இல் காவல் ஆணையராக இருந்த போல்டர்சன் தொடங்கி 2016 வரை காவல் ஆணையராக இருந்தவர்களின் பெயர் பலகை வைக்கப்பட்டுள்ளது.

இதைவிட சுவாரஸ்யம் என்னவென்றால் 1870இல் போலீசார் பயன்படுத்திய சீமை வண்டி எனப்படும் சைக்கிள் இங்கு காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. 1982இல் பயன்படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிள், புல்லட், சென்னை மாநகர காவலுக்காக வாங்கப்பட்ட குண்டு துளைக்காத கார், மெரினா கடற்கரையில் பயன்படுத்தப்பட்ட ரோந்து வாகனங்கள் இங்கு உள்ளன.

தமிழக காவல்துறையின் தொடக்க கால சீருடைகள், வரலாற்று சிறப்பு மிக்க செய்தி தொகுப்புகள் இடம் பெற்றுள்ளன. குறிப்பாக இந்தி எதிர்ப்பு போராட்டம், விடுதலை புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன் சென்னையில் கைது செய்யப்பட்ட போது எடுக்கப்பட்ட புகைப்படம், வீரப்பன் கைது உள்ளிட்ட புகைப்படங்கள் உள்ளன. 1700 முதல் 1914ஆம் ஆண்டு வரை காவல்துறையினர் பயன்படுத்திய கோடாரி, கத்திகளை பல்வேறு மாநிலங்களில் இருந்து கொண்டு வந்து காட்சிக்காக வைத்துள்ளனர். மேலும், ஏ.கே. 47 ரக துப்பாக்கிகள், தோட்டாக்கள், விடுதலைப்புலிகள் அமைப்பிடமிருந்து கைப்பற்றப்பட்ட சிறு பீரங்கி, சாமானியர்கள் பயன்படுத்திய நாட்டுத்துப்பாக்கி ரகங்களும் கண்காட்சியில் வைக்கப்பட்டுள்ளன.

கொரோனா பரவல் குறைந்து காவல்துறை அருங்காட்சியகம் திறக்கப்படும் பட்சத்தில் மக்களிடம் பெரும் வரவேற்பு பெரும் என்பதில் சந்தேகமில்லை.