வீடியோ ஸ்டோரி

தகாத வார்த்தைகளால் திட்டி தீர்த்த கந்துவட்டி கும்பல்? - தற்கொலைக்கு அனுமதி கோரி மனு

தகாத வார்த்தைகளால் திட்டி தீர்த்த கந்துவட்டி கும்பல்? - தற்கொலைக்கு அனுமதி கோரி மனு

கலிலுல்லா

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் கடன் பெற்ற குடும்பத்தினரை, கந்துவட்டி கும்பல் தகாத வார்த்தைகளால் திட்டிய நிலையில், தற்கொலை செய்து கொள்ள அனுமதி கோரி, பாதிக்கப்பட்ட பெண் கோட்டாட்சியர் காலில் விழுந்து மன்றாடியுள்ளார்.

கோவில்பட்டி அன்னை தெரசா நகர் பகுதியை சேர்ந்த சுப்புராஜ் என்பவர், மருத்துவ செலவிற்காக முருகேச பாண்டியன் என்பவரிடம் 4 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் வட்டிக்கு கடன் பெற்றுள்ளார். தொடர்ந்து வட்டி செலுத்த முடியாததால், அந்த கடனை அடைக்க, சுப்புராஜூம் அவரது மனைவி வனிதாவும் வேறு சில நபர்களிடம் கடன் வாங்கியுள்ளனர். இதனிடையே கடனை அடைப்பதற்காக வெளிநாட்டிற்கு வேலைக்கு சென்றுள்ளார் சுப்புராஜ். ஆனால், அங்கு குறைவான ஊதியம் வழங்கி ஏமாற்றப்பட்டப்பட்டதால், அவரது குடும்பம் கடனுக்கு மேல் கடன் வாங்கும் நிலைக்கு தள்ளப்பட்டதாக தெரிகிறது. 

இந்நிலையில், ஆசிரியை புஷ்பா என்பவரிடம் இருந்து கடனாக பெற்ற ஒரு லட்சத்து 70 ஆயிரம் ரூபாய்க்கு 2 லட்சத்திற்கு மேல் வட்டி மட்டும் செலுத்தியுள்ளதாக கூறப்படுகிறது. எனினும், 6 லட்சம் ரூபாய் வரை தர வேண்டும் என ஆசிரியை புஷ்பாவும், அவரது கணவர் ராமமூர்த்தியும் தொடர்ந்து வனிதாவை மிரட்டியுள்ளனர். மேலும், தகாத வார்த்தைகளாலும் திட்டியுள்ளனர். மனம் உடைந்த வனிதா, தனது குழந்தைகள் மற்றும் மாமியாருடன் சென்று, கோட்டாட்சியர் சங்கரநாராயணனிடம் தற்கொலை செய்து கொள்ள அனுமதி தருமாறு காலில் விழுந்து மன்றாடியுள்ளார். இதனால், அதிர்ச்சி அடைந்த கோட்டாட்சியர் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்து, வனிதாவை அனுப்பி வைத்தார்.