கட்சி, இனம், மதம் என அனைத்தையம் கடந்து மக்களின் நம்பிக்கையை பெற்றால் யார் வேண்டுமானலும் உள்ளாட்சி பிரதிநிதி ஆகலாம். இதற்கு உதாரணமாக வலம்வருகிறார் பெரம்பலூரைச் சேர்ந்த ரமேஷ் பாண்டியன்.
கடந்த 2001ஆம் ஆண்டு தனது 26 வயதில் 14வது வார்டில் முதன்முறையாக போட்டியிட்ட ரமேஷ் பாண்டியன், 2006 மற்றும் 2011 ஆகிய தேர்தல்களிலும் பிரதான கட்சியின் வேட்பாளர்களைவ வீழ்த்தி தொடர் வெற்றியை பதிவுசெய்தார்.
பேச்சிலும், உடையிலும், செயலிலும் எளிமையாக வலம்வரும் ரமேஷ், நண்பர்கள் ஆதரவும் அனைத்து நேரமும் மக்களுடன் இருப்பதால் தொடர்ந்து தேர்வு செய்யப்பட்டதாக தெரிவித்தார்.
7 ஆம் வகுப்புவரை பயின்றுள்ள ரமேஷ், வாகன சீட்கவர் தைத்துத்தரும் தொழில் செய்து வந்தார். உடல்நலக் குறைவால் தொழிலை கைவிட்ட அவர், தற்போது மக்களுக்கு சேவை செய்து வருகிறார்.
தேர்தல் பணிக்காக செலவுசெய்வதில்லை எனக்கூறும் ரமேஷ், மக்களின் அன்பே தனக்கு ஹாட்ரிக் வெற்றியை வசமாக்கியது என்றார். வார்டு வரையறை செய்யப்பட்டதால் தனது பகுதிக்கு உட்பட்ட 5வது வார்டில் தற்போது போட்டியிடுகிறார்.
புரதான அரசியல் கட்சிகள் களம்காணும் இத்தேர்தலில் ரமேஷ் பாண்டியன் மீண்டும் வெற்றிபெறுவாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.