வீடியோ ஸ்டோரி

யாருக்கெல்லாம் கொரோனா பரிசோதனை தேவை?- சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள புதிய விதிமுறைகள்

யாருக்கெல்லாம் கொரோனா பரிசோதனை தேவை?- சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள புதிய விதிமுறைகள்

நிவேதா ஜெகராஜா

கொரோனா தொற்று உறுதியானவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள், எந்தவித அறிகுறியும் தெரியவில்லை என்றால் கொரோனா பரிசோதனை செய்துகொள்ள வேண்டியதில்லை என சுகாதாரத்துறை புதிய விதிமுறைகளை வகுத்துள்ளது. இதுதொடபர்பான சுகாதாரத்துறையின் அறிக்கையில் யாரெல்லாம் கொரோனா பரிசோதனை செய்து கொள்ள வேண்டும், வேண்டாம் என்பது குறித்த விவரங்கள் வெளிவந்துள்ளன.

தமிழக பொது சுகாதாரத்துறை சார்பில் வெளியான திருத்தப்பட்ட கொரோனா விதிமுறைகள்: “சளி, காய்ச்சல், தொண்டை வலி, சுவை அல்லது வாசனை இழப்பு, மூச்சுத் திணறல் மற்றும் சுவாச பிரச்னைகள் இருந்தால் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும். நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம், நுரையீரல் அல்லது சிறுநீரக நோய் உள்ளவர்கள் கட்டாயம் கொரோனா பரிசோதனை செய்ய வேண்டும். சர்வதேச நாடுகளுக்கு செல்வோர், வெளிநாடுகளில் இருந்து வருவோர் தொற்று பரிசோதனை செய்ய வேண்டும். கொரோனா பாதிக்கப்பட்டோருடன் தொடர்பில் இருந்த 60 வயதுக்கு மேற்பட்டோர் மற்றும் இணை நோய் உள்ளவர்கள் கட்டாயம் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும்.

அதேசமயம் வயோதிகம் அல்லது இணை நோய் இல்லாதவர்கள் கொரோனா பாதிக்கப்பட்டோருடன் தொடர்பில் இருந்தாலும் கொரோனா பரிசோதனை செய்துகொள்ளத் தேவையில்லை என சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. இதேபோல், அறிகுறிகள் இல்லாதோர், வீட்டுத் தனிமையிலிருந்து குணமடைந்தோர், மருத்துவமனையிலிருந்து குணமடைந்தோர் மற்றும் மாநிலத்திற்குள்ளேயே பயணம் மேற்கொள்வோர் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள தேவையில்லை” இவ்வாறு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.