வீடியோ ஸ்டோரி

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு: மர்மம் விலகுமா? திருப்பங்கள் நிகழுமா?

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு: மர்மம் விலகுமா? திருப்பங்கள் நிகழுமா?

JustinDurai

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் தொடர்புடையதாக கருதப்படும் சயான் மற்றும் வாளையார் மனோஜ் ஆகியோருக்கு அடுத்தடுத்து ஜாமீன் கிடைத்து வெளியே வந்துள்ளனர். அடுத்த கட்டமாக, விரைவில் நடைபெற உள்ள வழக்கு விசாரணை அதிரடி திருப்பங்களை ஏற்படுத்துமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

நீலகிரி மாவட்டம், கோத்தகிரியில் உள்ள கோடநாடு எஸ்டேட்டில் முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதா பங்குதாரராக இருந்தார். அவர் மறைவிற்குப் பின் 2017 ஏப்ரல் 24-ஆம்தேதி கோடநாடு எஸ்டேட் காவலாளி ஓம் பகதூர் கொலை செய்யப்பட்டார். அங்கிருந்த சில முக்கியப்பொருட்கள் கொள்ளை போயின.

கொலையில் தொடர்புடையதாக கூறப்பட்ட ஜெயலலிதாவின் கார் ஓட்டுநர் கனகராஜ், சேலம் எடப்பாடியில் விபத்தில் சிக்கி உயிரிழந்தார். காவலாளி கொலை சம்பவத்தில் முக்கிய குற்றவாளிகளில் ஒருவராக கருதப்பட்ட சயான் குடும்பத்துடன் காரில் தப்பி செல்லும்போது விபத்திற்குள்ளாகி மனைவி, மற்றும் மகள் ஆகியோர் இறந்தனர், சயான் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதேபோன்று கோடநாடு எஸ்டேட் கம்ப்யூட்டர் ஆப்ரேட்டர் அதே ஆண்டில், ஜூலை 5 ஆம்தேதி தற்கொலை செய்தார்.

இப்படி 5 தொடர் மரணங்களை உள்ளடக்கிய கோடநாடு காவலாளி கொலை வழக்கு உதகை நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இதில் சாட்சிகள் மாற்றப்படுதாகவும், முக்கியப் பிரமுகர்களுக்கு கொலையில் தொடர்பிருப்பதாகவும் ஜாமீனில் வெளியில் இருந்த சயான், வாளையார் மனோஜ், ஆகியோர் கூறிவந்தனர். இதனைத்தொடர்ந்து இருவரின் ஜாமீன் ரத்து செய்யப்பட்டு மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்நிலையில் தற்போது கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு அடுத்தடுத்த நகர்வுகளை சந்தித்து வருகிறது. வழக்கில் அரசு சார்பு வழக்கறிஞர்கள் மாற்றப்பட்டு புதிதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் இருந்த ஷாஜகான், கனகராஜ் ஆகியோர் நியமிக்கப்பட்டனர். வழக்கில் தொடர்புடையதாக கருதப்படும் சயான் மற்றும் வாளையார் மனோஜ் ஆகியோருக்கு அடுத்தடுத்து ஜாமீன் கிடைத்துள்ளது.

இந்நிலையில், அதிமுக ஐடி விங்கில் முன்னர் இருந்தவரான ஆஸ்பயர் சுவாமிநாதன், கோடநாடு கொலை வழக்கு இறுதி கட்டத்தை எட்டியிருப்பதாகவும், சில சூப்பர் டூப்பர் திரில் வாக்குமூலங்கள் வெளியாகக்கூடும் என்று ட்விட்டரில் பதிவிட்டிருப்பது கவனத்தை ஈர்த்துள்ளது.