வீடியோ ஸ்டோரி

கொடைக்கானல்: எரிந்த நிலையில் மீட்கப்பட்ட சிறுமிக்கு நீதிகேட்டு கிராம மக்கள் போராட்டம்

கொடைக்கானல்: எரிந்த நிலையில் மீட்கப்பட்ட சிறுமிக்கு நீதிகேட்டு கிராம மக்கள் போராட்டம்

நிவேதா ஜெகராஜா

கொடைக்கானல் பாச்சலூர் கிராமத்தில் எரிந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட பள்ளிச்சிறுமியின் இறப்புக்கு நீதி கேட்டு, சிறுமியின் கிராம மக்கள் போராட்டத்தில் இறங்கியுள்ளனர். 

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் கீழ்மலை பாச்சலூர் கிராமத்தில் பள்ளி சிறுமியொருவர், மர்மமான முறையில் எரிந்த நிலையில் கடந்த 15ஆம் தேதி பெற்றோர்களால் கண்டுபிடிக்கப்பட்டார். அந்தச் சம்பவத்தில் நடைபெற்ற குற்றத்தையும் குற்றவாளிகளையும் ஏழு நாட்களை கடந்து விசாரணை செய்தும் காவல்துறையால் கண்டறிய முடியாமல் திணறி வருகிறது காவல்துறை.

இதனால் காவல்துறையினரை குற்றம்சாட்டி, சிறுமியின் பூர்வீக கிராமமான கூக்கால் கிராம மக்கள் சுமார் 200-க்கும் மேற்பட்டவர்கள் கொடைக்கானல் ஏரி பாலம் அமைந்துள்ள நெடுஞ்சாலையில் இன்று சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். போராட்டத்தை கைவிடுமாறு அவர்களிடம் காவல் துணை கண்காணிப்பாளர் சீனிவாசன் தலைமையிலான காவலர்கள் சமாதான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர். காவல்துறையின் பேச்சுவார்த்தையில் சமாதானம் அடையாத கிராம மக்கள் சிறுமியின் இழப்பிற்கு நீதி கிடைக்கும் வரை தொடர் போராட்டம் செய்யப்போவதாக அறிவித்து சாலை மறியலை தொடர்ந்து செய்தனர்.

இந்த சாலை மறியல் போராட்டத்தால் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு அடைந்தது.  தொடர்ந்து காவலர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களை வலுக்கட்டாயமாக கிராவல் வாகனங்களிலும் அரசு பேருந்து மற்றும் தனியார் பேருந்துகளில் ஏற்றி கலையரங்கம் பகுதியில் உள்ள வளாகத்திலும் திருமண மண்டபத்திலும் வைத்துள்ளனர். சிறுமியின் இறப்பில் மர்மம் குறித்த இந்த சாலை மறியல் போராட்டத்தால் கொடைக்கானலில் பெரும் பரபரப்பு நிலவுகிறது.