வீடியோ ஸ்டோரி

குளிர்பானம் குடித்த மாணவனின் கிட்னிகள் செயலிழப்பு – சக மாணவனின் பகீர் செயலால் விபரீதம்

குளிர்பானம் குடித்த மாணவனின் கிட்னிகள் செயலிழப்பு – சக மாணவனின் பகீர் செயலால் விபரீதம்

webteam

கன்னியாகுமரி மாவட்டம் மெதுகும்மல் அருகே 6 ஆம் வகுப்பு மாணவனுக்கு ஆசிட் கலந்த குளிர்பானத்தை வழங்கிய மாணவனால் இரண்டு கிட்னிகளும் செயலிழந்து மாணவர் உயிருக்கும் போராடி வருகிறார்.

கன்னியாகுமரி மாவட்டம் மெதுகும்மல் பகுதியைச் சேர்ந்தவர் சுனில். இவரது 11 வயது மகன் அதங்கோடு பகுதியில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் 6 ஆம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் கடந்த 24 ஆம் தேதி தேர்வு எழுதுவதற்காக பள்ளிக்கு சென்று தேர்வு எழுதி விட்டு வீட்டிற்கு வருவதற்காக நின்று கொண்டிருந்தார்.

அப்போது அதே பள்ளி சீருடையில் வந்த மாணவன் ஒருவர், 6 ஆம் வகுப்பு மாணவனிடம் குளிர்பானம் ஒன்றை கொடுத்து குடிக்கக் கூறியுள்ளார். அதை வாங்கிய மாணவன் குளிர்பானத்தை குடித்துக் கொண்டிருந்தபோது பின்னால் இருந்து ஓடி வந்த சிறுவன் ஒருவன் அவர் மீது மோதியுள்ளான் இதில் குளிர்பான பாட்டில் கீழே விழுந்துள்ளது.

இதனைத் தொடர்ந்து வீட்டிற்கு வந்த மாணவனுக்கு இரவு நேரத்தில் திடீரென குளிர்காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர் சிறுவனை அழைத்துக் கொண்டு மார்த்தாண்டம் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்று காய்ச்சலுக்கு மருந்து வாங்கி வந்துள்ளனர்.

இருந்தும் சிறுவனுக்கு காய்ச்சல் குறையாமல் இருந்துள்ளது. இதைத் தொடர்ந்து மாணவனின் வாய் நாக்கு உள்ளிட்ட பகுதிகளில் புண்கள் ஏற்பட்டுள்ளது. இதனால் பயமடைந்த பெற்றோர் சிறுவனை அழைத்துக் கொண்டு நெய்யாற்றின் கரையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர்.

அங்கு மாணவனை பரிசோதித்த மருத்துவர்கள், மாணவன் அருந்திய குளிர்பானத்தில் ஆசிட் கலந்து கொடுக்கப்பட்டுள்ளது தெரியவந்ததோடு சிறுவனின் இரண்டு சிறுநீரகங்களும் செயலிழந்து இருந்ததும் தெரியவந்தது. இதனையடுத்து சிறுவனின் பெற்றோர் களியக்காவிளை போலீசில் புகார் அளித்துள்ளனர்.

அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வரும் நிலையில், உயிருக்கு ஆபத்தான நிலையில் மாணவன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.