வீடியோ ஸ்டோரி

பழந்தமிழர் நாகரிகத்தை வெளிக்கொணர்ந்த கீழடி: 7ஆம் கட்ட அகழாய்வு இன்று நிறைவு

பழந்தமிழர் நாகரிகத்தை வெளிக்கொணர்ந்த கீழடி: 7ஆம் கட்ட அகழாய்வு இன்று நிறைவு

Veeramani

தொன்மைத் தமிழரின் தாய்மடியாக எண்ணற்ற தொல்படிவங்களை வெளிக்கொண்டு வந்த கீழடியில் ஏழாம் கட்ட அகழாய்வு இன்றுடன் நிறைவு பெற்றது.

கீழடி, சிவகங்கை சிவகங்கை மாவட்டம் கீழடியில் 2015 முதல் 2020 வரை 6 கட்டங்களாக அகழ்வாராய்ச்சிப் பணிகள் நடைபெற்றன. 7 ஆம் கட்ட அகழ்வாராய்ச்சிப் பணிகள் பிப்ரவரி 13 ஆம் தேதி தொடங்கிய நிலையில், இன்றுடன் நிறைவடைந்துள்ளன.

கீழடியில் முதல் 3 கட்ட அகழாய்வினை மத்திய தொல்லியல் துறையும், அதற்கு அடுத்த 4 கட்ட அகழ்வாராய்ச்சிகளை தமிழக தொல்லியல் துறையும் நடத்தின. சுமார் 2600 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த தொன்மக்கள் பயன்படுத்திய தங்க அணிகலன்கள், மண்பாண்டப் பொருட்கள், சுடுமண் மனித முகம், தமிழி எழுத்து பொறித்த பானை ஓடு, சுடுமண் காதணி, உறை கிணறு, நீர்வழிப்பாதை, தண்ணீர் தொட்டி உள்ளிட்ட 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொருட்கள் 6 கட்ட அகழ்வாராய்ச்சிகளில் கண்டறியப்பட்டுள்ளன.

கீழடியைத் தொடர்ந்து மணலூர், கொந்தகை, அகரம் ஆகிய இடங்களிலும் அகழ்வாராய்ச்சி விரிவுபடுத்தப்பட்டது. இதில், 25க்கும் மேற்பட்ட முதுமக்கள் தாழி, கருப்பு சிவப்பு பானை ஓடுகள், வெளிநாடுகளுடன் வணிகம் மேற்கொண்ட சான்றுகள், சங்கு வளையல்கள், பருகு நீர் குவளை, பகடைக்காய், வெள்ளியிலான முத்திரை நாணயம், நூல் கோர்க்கும் தக்களி, மரக் கைப்பிடி கொண்ட குத்துவாள் உள்ளிட்ட 3000க்கும் மேற்பட்ட தொன்மையான பொருட்கள் கண்டறியப்பட்டுள்ளன.

முதல் 6 கட்ட அகழாய்வில் எடுக்கப்பட்ட கரிம பொருட்கள் அமெரிக்கா பீட்டா ஆய்வகத்தில் கார்பன்டேட்டிங் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட நிலையில் 7ம் கட்ட அகழாய்வு பொருட்கள், கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் கார்பன்டேட்டிங் ஆய்வு செய்யப்பட உள்ளன. அகழாய்வில் எடுக்கப்பட்ட பானை, ஓடுகள் பகுப்பாய்வுக்கு செய்ய இத்தாலி பைசா பல்கலைக்கழகத்திற்கும் விலங்குகள், மனித எலும்பு கூடுகள் மூலம் அதன் காலத்தை கண்டறிய புனே ஆராய்ச்சி மையத்திற்கும் அனுப்பப்படுகின்றன. மனித எலும்பு கூடுகளை மரபணு பரிசோதனை செய்ய மதுரை காமராசர் பல்கலைக்கழகம் மற்றும் திருவனந்தபுரம் பல்கலைக்கழகத்திற்கும் அனுப்பி வைக்கப்படுகிறது.

அகழாய்வில் கண்டறியப்பட்ட பொருட்களை தற்காலிகமாக மதுரை உலக தமிழ்ச் சங்கத்தில் காட்சிப்படுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிலையில், அடுத்த10 தினங்களில் நில உரிமையாளர்களிடம் அகழாய்வு நிலம் ஒப்படைக்கப்பட உள்ளது.