மாறிவரும் வாழ்க்கை முறையால் அடிக்கடி ஏற்படும் உடல்நலக் குறைவுக்காக மாதச் சம்பளத்தில் ஒருத் தொகையை ஒதுக்கும் நிலை ஒவ்வொரு குடும்பத்திலும் இருக்கிறது. தற்போதுள்ள சூழலில் மருத்துவமனைக்குச் சென்றாலே சில ஆயிரம் ரூபாயில் இருந்து லட்சக் கணக்கில் செலவாவதை கண்கூடாகப் பார்க்கமுடிகிறது.
இத்தகைய சூழலில் மருத்துவக் காப்பீடு என்பது காலத்தில் கட்டாயமாகவே மாறிவிட்டது. ஏதாவதொரு காப்பீட்டு நிறுவனத்தில் குறிப்பிட்ட பிரீமியம் செலுத்தி ஒரு தொகைக்கு மருத்துவக் காப்பீடு பெறலாம். இதையடுத்து அடுத்த ஓராண்டில் எதிர்பாராத விதமாக ஏற்படும் மருத்துவச் செலவை அந்த காப்பீட்டு நிறுவனமே ஏற்கும். மருத்துவக் காப்பீடு எடுத்தவர்களுக்கு ஏற்கெனவே உள்ள நோய்களுக்கு குறிப்பிட்ட ஆண்டுகளுக்குப் பிறகு காப்பீடு மூலம் சிகிச்சை பெற்றுக் கொள்ள முடியும்.
மருத்துவக் காப்பீடு திட்டங்களில் செலுத்தப்படும் பிரிமீயத்திற்கு வருமான வரிச்சட்டத்தின் கீழ் வரிச்சலுகை உண்டு. உதாரணத்திற்கு மருத்துவக் காப்பீட்டுக்கான காப்பீட்டு தொகை 3 லட்சம் என வைத்துக் கொண்டால், அதற்கு முன்னணி பொதுத்துறை வங்கி ஒன்றில் பிரீமியத் தொகை ஆண்டுக்கு சுமார் 10,500 ரூபாய். ஒரு தனி நபருக்கோ அல்லது 18 வயதிற்கு மிகாமல் உள்ள இரண்டு குழந்தைகள் மற்றும் பெற்றோருக்கும் சேர்த்தோ, குடும்ப மருத்துவக் காப்பீடு எடுத்துக் கொள்ளலாம். பல காப்பீட்டு நிறுவனங்களில் மருத்துவப் பரிசோதனையுடன் 60 அல்லது 65 வயது வரை மருத்துவக் காப்பீடு எடுத்துக் கொள்ள முடியும்.
ஆரோக்கியம் தான் மிகப்பெரிய சொத்து என நம் முன்னோர்கள் கூறுவார்கள். அவசர உலகில் நோய்களும் பெருகிவரும் நிலையில், மருத்துவக் காப்பீடு எடுப்பதுதான் புத்திசாலித்தனம் பிரீமியத்திற்காக செலவு செய்கிறோம் என நினைக்காமல் பாதுகாப்பாக இருக்கிறோம் என நிம்மதியுடன் வாழ முடியும்.