கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்தில் போத்துகல் (POTHUKAL) என்ற இடத்தில் இஸ்லாமிய இளம் பெண் ஒருவர், பார்வை மாற்றுத்திறனாளி கணவர் மற்றும் குழந்தையுடன் சாலையோரத்தில் வசித்து வருகிறார். இறை பாடல்களைப் பாடி அதன்மூலம் கிடைக்கும் சொற்ப வருவாயை வைத்து குடும்பத்தைக் காப்பாற்றி வருகிறார் அந்தப்பெண்.
இந்நிலையில், அவர், தளர்வடைந்தபோது இந்து மாணவி ஒருவர் உதவிக்கரம் நீட்டியுள்ளார். ஆதிரா என்ற பத்தாம் வகுப்பு மாணவி இஸ்லாமிய பெண்ணுக்கு ஆதரவாக அம்மதத்தின் பாடல்களைப் பாடியுள்ளார். பிறருக்கு உதவும் மனப்பான்மை கொண்ட ஆதிராவுக்கு உதவிகள் கிடைக்காமல் இருக்குமா? இஸ்லாமியப் பெண்ணுக்கு உதவியதை போல, இந்துவான ஆதிராவுக்கு வீடு கட்டிக் கொடுக்கும் பொறுப்பை கத்தோலிக்க பள்ளி நிர்வாகம் ஏற்றுக்கொண்டுள்ளது.
இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட மண்சரிவில் சொந்த வீட்டை இழந்த ஆதிராவின் குடும்பம், தற்போது வாடகை வீட்டில் வசித்து வருகிறது. அவருக்கு உதவி செய்ய கிறிஸ்தவ பள்ளி முன்வந்துள்ளது. கடந்த மாதம் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்திய 'தி கேரளா ஸ்டோரி' திரைப்படத்தில், இந்துப் பெண்கள் இஸ்லாத்துக்கு மாற்றப்பட்டு பயங்கரவாதிகளாக மாற்றப்படுவதுபோல் காட்சிப்படுத்தப்பட்டு இருந்தது. அதற்கு கடும் எதிர்ப்பு எழுந்தது.
ஆனால், இந்து - இஸ்லாம் - கிறிஸ்தவம் என மதவேறு களைந்து அனைவரும் ஒருவருக்கொருவர் உதவி செய்து வாழ்வதே உண்மையான 'கேரளா ஸ்டோரி' என ஆதிராவை சுட்டிக்காட்டி, சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் பதிவிட்டு வருகின்றனர்.