கங்கை முதல் கடாரம் வரை வென்ற தமிழ் பேரரசன் ராஜேந்திர சோழனின் பிறந்த நாளான நேற்று, ராஜேந்திர சோழன் காலத்தில் வெளியிடப்பட்ட செப்பு நாணயம் ஒன்று கண்டறியப்பட்டது.
சோழப் பேரரசன் ராஜராஜ சோழனின் பிறந்த தினம் அரசு விழாவாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில், அவரது மகனும் கங்கை முதல் கடாரம் வரை புலிக்கொடியை பறக்கச் செய்து கடல் கடந்து ஆட்சியை நிறுவிய பேரரசனுமான ராஜேந்திர சோழனின் பிறந்த தினம் ஆடித்திருவாதிரை நாளில் கொண்டாடப்படுகிறது.
இதை முன்னிட்டு கங்கைகொண்ட சோழபுரத்தில், இந்திய தொல்லியல் துறை மற்றும் கங்கைகொண்ட சோழபுர மேம்பாட்டு அமைப்பு சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது. முதல் கப்பல் படையை உருவாக்கியவரும் சொழ சாம்ராஜ்யத்தை தென்கிழக்கு ஆசியாவரை விரிவுபடுத்தியவருமான ராஜேந்திர சோழனின் பிறந்த நாளில் அவர்காலத்திய செப்பு நாணயம் கிடைத்துள்ளதாக, சென்னை நாணயவியல் அமைப்பைச் சேர்ந்த மணிகண்டன் தெரிவித்துள்ளார்.
இதற்கு முன்பு ராஜேந்திர சோழனின் தங்க நாணயங்கள் பல நாடுகளில் கண்டறியப்பட்ட நிலையில், தற்போது கிடைத்துள்ள செப்பு நாணயம் குறித்து ஆய்வாளர்கள் புதிய தகவல்களை பகிர்கின்றனர். இந்த நாணயம் மட்டுமின்றி ராஜேந்திர சோழனின் காலத்தைச் சேர்ந்த 400 கல்வெட்டுகள் பிரதி எடுக்கப்பட்டும் வெளியில் விடாமல் இருளில் இருப்பதாக வருந்துகிறார்கள் ஆய்வாளர்கள்
வரலாற்றை எழுதும் பணிக்கு முக்கியத் தேவையான கல்வெட்டு பிரிவுக்கு பணியிடங்களை ஒதுக்கி கவனமளித்தால் தமிழ்நாட்டின் தொன்மையும் அளப்பறிய ஆற்றலும் கலை உணர்வும் வரலாறும் வெளிப்படும் என்கிறார்கள் வரலாற்று ஆய்வாளர்கள்