வீடியோ ஸ்டோரி

உறுதி அளித்த ஆட்சியர்.. போராட்டத்தைக் கைவிட்ட காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி

உறுதி அளித்த ஆட்சியர்.. போராட்டத்தைக் கைவிட்ட காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி

கலிலுல்லா

மத்திய அரசு திட்டத்தின் கீழ் மாற்றுத்திறனாளிகளுக்கு உபகரணங்கள் வழங்குவதற்கான முகாம் நடத்த ஏற்பாடு செய்ய வழிவகை செய்வோம் என மாவட்ட வருவாய் அலுவலர் உறுதி அளித்தன் பேரில் எம்.பி ஜோதிமணி தனது போராட்டத்தை வாபஸ் பெற்றுள்ளார்.

கரூர் மாவட்டத்தில் மத்திய அரசு திட்டத்தின் கீழ் மாற்றுத்திறனாளிகளுக்கு உபகரணம் வழங்குவது தொடர்பாக முகாம் நடத்தக் கோரி மாவட்ட ஆட்சியருக்கு கரூர் எம்.பி ஜோதிமணி பலமுறை வலியுறுத்தி உள்ளார். இதனிடையே கரூர் நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்ட திருச்சி மற்றும் திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் இந்த முகாம்கள் நடந்து முடிந்துவிட்டது.

கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு நேற்று மதியம் வந்த கரூர் எம்.பி. ஜோதிமணி, மத்திய அரசின் திட்டத்தின் கீழ் மாற்றுத்திறனாளிகள் முகாம்கள் நடத்தக் கோரி ஆட்சியருக்கு 3 முறை கடிதம் எழுதியும் முகாம்களை ஏற்பாடு செய்யாமல் என்னைப் பணி செய்யவிடாமல் தடுக்கிறார் எனக் கூறி ஆட்சியரைக் கண்டித்து ஆட்சியர் அலுவலக தரைத்தளத்தில் தரையில் அமர்ந்து உள்ளிருப்புப் போராட்டத்தைத் தொடங்கினார். இதனால் ஆட்சியர் அலுவலக வளாகம் பரபரப்பானது. நேற்று இரவு ஆட்சியர் அலுவலக வளாகத்திலேயே எம்பி ஜோதிமணி உள்ளிட்ட காங்கிரசார் படுத்து உறங்கினர்.

மத்திய அரசு திட்டத்தின் கீழ் மாற்றுத்திறனாளிகளுக்கு உபகரணங்கள் வழங்குவதற்கான முகாம் நடத்த ஏற்பாடு செய்ய வழிவகை செய்வோம் என்ற உறுதி அளித்ததின் பேரில் எம்பி ஜோதிமணி போராட்டத்தை வாபஸ் பெற்றார்.