வீடியோ ஸ்டோரி

மார்பகப் புற்றுநோய் குறித்து பெண்கள் அறிந்து கொள்ள வேண்டியவை என்ன? - விரிவான அலசல்

மார்பகப் புற்றுநோய் குறித்து பெண்கள் அறிந்து கொள்ள வேண்டியவை என்ன? - விரிவான அலசல்

கலிலுல்லா

உலகம் முழுவதும் பெண்களிடையே மார்பகப் புற்றுநோய் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கான மாதமாக அக்டோபர் மாதம் கடைபிடிக்கப்படுகிறது. மார்பகப் புற்றுநோய் குறித்து பெண்கள் அறிந்து கொள்ள வேண்டியவை என்ன? 

2018 ஆம் ஆண்டு கணக்கெடுப்பின் படி உலகில் புற்றுநோய் பாதிப்பில் 11.6 சதவிகிதம், மார்பகப் புற்றுநோயாக இருக்கிறது என்கிறது உலக சுகாதார நிறுவனம். இந்தியாவிலோ இது14 சதவிகிதமாக உள்ளது. இந்தியாவில் 2018 ஆம் ஆண்டில் மட்டும் 1 லட்சத்து 62 ஆயிரத்து 468 பேருக்கு மார்பகப் புற்றுநோய் கண்டறிப்பட்டுள்ளது. அதே ஆண்டில் 87 ஆயிரத்து 90 பேர் மார்பகப் புற்றுநோயால் உயிரிழந்துள்ளனர். எனவே, மார்பகப் புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு பெண்களிடையே அவசியமாகிறது. சுய பரிசோதனை செய்து கொள்ளும் போது ஏதாவது வித்தியாசம் தெரிந்தால், முளைக்காம்பிலிருந்து ரத்தம், அல்லது வேறு ஏதாவது திரவம் வெளியேறினால் அவர்கள் உடனே பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.

அறிகுறிகள் இல்லாவிட்டாலும் 40 வயதுக்கு மேல் அனைவரும் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என்கிறார் மருத்துவர் மஞ்சுளா ராவ். மாதம் ஒருமுறை மாதவிடாய் முடிந்த ஒருவாரத்திற்குள் கண்ணாடி முன் நின்று ஒவ்வொரு பெண்ணும் சுயபரிசோதனை செய்வது மிக அவசியம் எனக் கூறும் மருத்துவர் மஞ்சுளா, அதை எப்படி செய்வது என்றும் விவரிக்கிறார்.

மாதவிடாய் சீக்கிரமே ஏற்படுதல், மெனோபாஸ் என்ற மாதவிடாய் நிற்றல் நிலை மிகவும் தாமதமாதல் , 30 வயதுக்கு மேல் முதல் குழந்தை பெறுதல், குழந்தைக்கு பால் கொடுக்காமல் தவிர்த்தல் ஆகியோருக்கு மார்பகப் புற்றுநோய் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் சற்றே அதிகமாக இருக்கலாம் என்பது மருத்துவர்களின் கருத்து. தவிர, பதப்படுத்தப்பட்ட உணவுகளை அதிகம் உண்ணுதல், உடற்பயிற்சி செய்யாதது, மது மற்றும் புகைப்பழக்கம் , உடல் பருமன் ஆகியவை மற்ற புற்றுநோய்களைப் போலவே மார்பகப் புற்றுநோய்க்கும் காரணமாக இருக்கலாம் என்பதால் இவற்றை தவிர்க்க வேண்டும் என்கின்றனர் மருத்துவர்கள்.