மதுரை வாடிப்பட்டியில் கடத்தப்பட்டதாக கூறப்பட்ட அதிமுக வேட்பாளர், தனது வேட்புமனுவை வாபஸ் பெற்றுள்ளார். மேலும் தன்னை யாரும் கடத்தவில்லை என்றும் அவர் பேட்டி அளித்துள்ளார்.
இச்சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், கடத்தப்பட்டதாக கூறப்பட்ட இந்திராணி, பத்திரிகையாளர்களிடம் நேரடியாக பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவர், “தன்னை திமுகவினரோ அல்லது வேறு யாருமோ கடத்தவில்லை. என்னுடைய கணவருக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் எனது வேட்புமனுவை திரும்பப் பெற்று உள்ளேன்” என கூறினார்.
வாடிப்பட்டி பேரூராட்சி 9வது வார்டில் அதிமுக சார்பில் போட்டியிட்ட இந்திராணி தனது வேட்பு மனுவை வாபஸ் பெற்று அதன் மூலம் அந்த வார்டில் திமுக சார்பில் போட்டியிட்ட கிருஷ்ணவேணி அவரை எதிர்த்து போட்டியிட வேறு யாரும் இல்லாத காரணத்தால் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இந்நிலையில், முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் மற்றும் அவரது ஆதரவாளர்கள் அதிமுக கட்சிகள் சுமார் 150-க்கும் மேற்பட்டோர் அண்ணா சிலை முன்பு தொடர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். மீதமுள்ள 17 அதிமுக வேட்பாளர்களை திமுகவினர் யாரும் கலந்து விடக்கூடாது என்பதற்காக தங்களது போராட்டம் நடத்தி வருவதாகவும் முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார் தெரிவித்திருந்தார்.
போராட்டத்தில் ஈடுபட்ட முன்னாள் அமைச்சருடன் மதுரை மாவட்ட காவல் எஸ்பி பாஸ்கரன் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டும் போராட்டம் விலக்கிக் கொள்ளாமல் நீடித்தது குறிப்பிடத்தக்கது.