கோவை மாவட்டத்தில் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக வார இறுதி நாள்களில் கூடுதல் கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. கோவை மாவட்டத்தில் கொரோனா பரவலை தடுக்க எடுக்கப்படும் பல கட்ட நடவடிக்கைகளில் ஒன்றாக, கட்டுப்பாடுகள் உயர்த்தப்படும் நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
தொடர்புடைய செய்தி: கோவையில் துணிக்கடை, நகைக்கடை, மால், பூங்கா சனி, ஞாயிறுகளில் இயங்கத் தடை - ஆட்சியர்
இதன்படி, கோவை மாநகராட்சி மற்றும் மாவட்டத்திலுள்ள நகராட்சிப் பகுதிகளில் துணிக்கடைகள், நகைக் கடைகள் சனி, ஞாயிறன்று இயங்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. அதேபோல, அனைத்து பூங்காக்களிலும் இன்றும் நாளையும் பொதுமக்களுக்கு அனுமதியில்லை. அனைத்து வணிக வளாகங்களும் இன்றும் நாளையும் செயல்பட தடை விதிக்கப்பட்டுள்ளது.
உணவகங்கள், பேக்கரிகள் காலை 8 முதல் மாலை 6 மணி வரை 50 % வாடிக்கையாளர்களுடன் இயங்க அனுமதிக்கப்பட்டுள்ளன. உணவகங்கள், பேக்கரிகளில் மாலை 6 மணிக்கு மேல் பார்சல் சேவை மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ளன. மாவட்டத்திலுள்ள உழவர் சந்தைகள் 50 % கடைகள் சுழற்சி முறையில் இயங்க அறிவுறுத்தப்பட்டுள்ளதோடு, அனைத்து வாரச்சந்தைகள் இயங்கவும் தடை விதிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.