புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில மின்சாரம் பாய்ந்து உயிருக்குப் போராடிய குரங்கை கால்நடை மருத்துவர்கள் காப்பாற்றியுள்ளனர்.
புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம் 99.99 ஏக்கர் பரப்பளவைக் கொண்டது. இந்த ஆட்சியர் அலுவலகத்தை சுற்றி ஏராளமான மரங்கள் இருப்பதால் இங்கு மயில்கள் குரங்குகள் பாம்பு உள்ளிட்டவைகள் அதிக அளவு தெரிவது வழக்கம்.
இந்நிலையில், நேற்று ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள கழிவறை அருகே குரங்கு ஒன்று அடிபட்ட நிலையில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தது. இதனையடுத்து ஆட்சியர் அலுவலகத்தில் பணியாற்றும் அலுவலர்கள் இதுகுறித்து கால்நடை துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். பின்னர் சம்பவ இடத்திற்கு கால்நடை பராமரிப்புத்துறை நடமாடும் சிகிச்சை ஊர்தியில் வந்த கால்நடை மருத்துவர்கள் காயமடைந்த குரங்குக்கு சிகிச்சை மேற்கொண்டனர்.
மேலும், அந்தக் குரங்கு மின் கம்பி உரசி காயம் அடைந்தது தெரியவந்ததை தொடர்ந்து சிகிச்சைக்கு பிறகு கால்நடை மருத்துவர்கள் வனத்துறையினரிடம் குரங்கை ஒப்படைத்த நிலையில், வனத்துறையினர் குரங்கை காப்பு காட்டில் விடுவதற்காக கொண்டு சென்றனர்.