வீடியோ ஸ்டோரி

நெல்லை: எவ்வளவு நீரையும் அசராமல் உள்வாங்கும் அதிசயக் கிணறு - பார்க்க அலைமோதும் கூட்டம்

நெல்லை: எவ்வளவு நீரையும் அசராமல் உள்வாங்கும் அதிசயக் கிணறு - பார்க்க அலைமோதும் கூட்டம்

Sinekadhara

நெல்லை மாவட்டத்தில் எவ்வளவு நீரையும் அசராமல் உள்வாங்கும் அதிசயக் கிணறை மக்கள் கூட்டம் கூட்டமாக வந்து பார்த்துச் செல்கின்றனர்.

நெல்லை மாவட்டம் திசையன்விளை வட்டம், முதுமொத்தன்மொழி ஊராட்சிக்கு உட்பட்ட ஆயன்குளம் ஊருக்கு அருகில் ஆயன்குளம் படுகை என்று அழைக்கப்படும் குளம் ஒன்று உள்ளது. இதன் அருகே சுமார் 60 ஆண்டுகளுக்கு முன்பு விவசாயத்திற்காக 2 கிணறுகள் தோண்டப்பட்டன. வறட்சி காரணமாக கிணற்றில் நீர் இல்லாததால், விவசாயம் கைவிடப்பட்டது.

சில ஆண்டுகள் கழித்து முதுமொத்தன்மொழியை சேர்ந்த சண்முகவேல் அந்தப் பகுதியை விலைக்கு வாங்கி கிணற்றை ஆழப்படுத்தி விவசாயம் செய்துள்ளார். அப்போது கிணற்றில் உள்ள நீர் வெளியேறி வருவதை அறிந்துள்ளார். இதனால் கிணற்றில் மிதக்கும் பொருட்களை போட்டு சோதனை செய்துள்ளார். அது 10 கிலோமீட்டர் தொலைவில் உவரி, குட்டம் உள்ள கிணறுகளில் மிதந்ததாக கூறப்படுகிறது. மேலும், அங்குள்ள கிணறுகளில் நீர்மட்டம் உயர்ந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக திசையன்விளை பகுதிகளில் பெய்த கனமழையால் ஆயன்குளத்தில் நீர் பெருக்கெடுத்தது. குளம் நிரம்பிய நிலையில், அந்த நீர் முழுவதும் அருகேயுள்ள கிணற்றுக்குள் பாய்ந்தது. ஒரு வாரமாக கிணற்றுக்குள் நீர் பாய்ந்த நிலையில், நீர் முழுவதையும் கிணறு உள்வாங்கியது.

இந்த செய்தி சுற்றுவட்டாரத்தில் வேகமாக பரவிய நிலையில் அதிசயக் கிணறை மக்கள் கூட்டம் கூட்டமாக பார்த்துச் செல்கின்றனர். தமிழ்நாடு சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு, நெல்லை மாவட்ட ஆட்சியர் விஷ்ணு ஆகியோரும் கிணற்றை பார்வையிட்டனர். தற்போது கிணறின் நீர்மட்டம் உயர்ந்து நிரம்பி உள்ள நிலையிலும், 100 கனஅடி நீரை கிணறு உள்வாங்கி வருவது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி உள்ளது. இப்பகுதிகளில் உள்ள பெரும்பாலான கிணற்று நீர் உவர்ப்பாக இருந்து வந்த நிலையில், அதிசய கிணறு தொடர்ந்து நீரை உள்வாங்கியதால் நல்ல நீராக மாறியதாக விவசாயிகள் கூறுகின்றனர். எனவே, கிணறை அரசு கையகப்படுத்தி நீர் தேக்கும் பகுதியாக மாற்றவேண்டும் என்றும் வலியுறுத்துகின்றனர்.