வீடியோ ஸ்டோரி

பி.எஃப், வங்கிக் கணக்குகளில் உரிமை கோரப்படாமல் இருக்கும் ரூ.90,820 கோடி

பி.எஃப், வங்கிக் கணக்குகளில் உரிமை கோரப்படாமல் இருக்கும் ரூ.90,820 கோடி

Veeramani

நாடு முழுவதும் வங்கி கணக்குகள், வருங்கால வைப்பு நிதி உள்ளிட்டவற்றில் 90 ஆயிரத்து 820 கோடி ரூபாய் உரிமை கோரப்படாமல் இருப்பதாக இந்திய ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள தரவுகளின்படி, பல்வேறு வங்கி கணக்குகள், வருங்கால வைப்பு நிதி கணக்குகள், செயலற்ற பரஸ்பர நிதிகள், எல்.ஐ.சி காப்பீடுகள், முதிர்ச்சியடைந்த நிலையான வைப்புத்தொகை, ஈவுத்தொகை ஆகியவற்றில் 90 ஆயிரத்து 820 கோடி ரூபாய் யாராலும் உரிமை கோரப்படாமல் இருப்பது தெரியவந்துள்ளது.

அதில், பி.எஃப் கணக்குகளில் மட்டும் உரிமை கோரப்படாமல் 24 ஆயிரத்து 497 கோடி ரூபாய் உள்ளது. வங்கிக் கணக்குகளில் 24 ஆயிரத்து 356 கோடி ரூபாய்க்கு யாரும் உரிமை கோரவில்லை. அதே போல், மியூச்சுவல் ஃபண்டுகளில் செயலற்ற நிலையில் உள்ள கணக்குகளில் 17 ஆயிரத்து 880 கோடி ரூபாய், எல்.ஐ.சி பாலிசிதாரர்கள் கணக்குகளில் 15 ஆயிரத்து 167 கோடி ரூபாய் இருப்பதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

இப்படி உரிமைக் கோரப்படாமல் இருக்கும் பணம் ஒவ்வொரு மாதமும் ரிசர்வ் வங்கியின் DEAF எனப்படும் வைப்புத்தொகை விழிப்புணர்வு பிரிவுக்கு மாற்றப்படும். ஆர்பிஐ விதிப்படி, ஒரு வங்கிக் கணக்கு 10 வருடத்திற்கு செயல்படாமல் இருந்தால், பணத்தை வைப்புத்தொகை விழிப்புணர்வு பிரிவுக்கு மாற்றலாம்.

உரிமை கோரப்படாத கணக்குகளின் விவரங்களை வங்கிகள் இணையதளத்தில் பதிவேற்றுகின்றன. அதைப்பார்த்து கணக்கு வைத்திருப்பவர் அல்லது கணக்கு வைத்திருப்பவரின் குடும்ப உறுப்பினர் வங்கிக்கு சென்று விதிமுறைகளின்படி பணத்திற்கு உரிமை கோரலாம். மேலும், உரிமை கோரப்படாத வைப்புத்தொகை தொடர்பான கணக்குதாரர்களை கண்டுபிடிக்க வங்கிகள் துரிதமாக செயல்பட வேண்டும் என்றும் ரிசர்வ் வங்கி அறிவுறுத்தியுள்ளது.