கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அடுத்த மயிலாடும்பாறையில் நடத்தப்பட்ட அகழாய்வில் 2 ஆயிரத்து 500 ஆண்டுகள் பழமை வாய்ந்த வாள் மற்றும் மண்பானை தோண்டி எடுக்கப்பட்டன.
மயிலாடும்பாறையில் தமிழ்நாடு தொல்லியல் துறை சார்பில் கடந்த மார்ச் மாதம் அகழாய்வு தொடங்கியது. இந்நிலையில் 70 சென்டிமீட்டர் நீளம் கொண்ட இரும்பு வாள் அகழ்வாய்வில் கண்டெடுக்கப்பட்டது. மேலும், 50 சென்டி மீட்டர் அளவில் ஒரு மண்பானையும் கிடைத்துள்ளது. இது தொடர்பாக 'புதிய தலைமுறை'க்கு பேட்டியளித்த அகழாய்வு இயக்குநர் சக்திவேல், மயிலாடும்பாறையில் சானரப்பன் மலையில் 30-க்கும் மேற்பட்ட பெருங்கற்கால ஈமச்சின்னங்கள் காணப்படுவதாக தெரிவித்தார்.
கண்டறியப்படும் பொருட்களை டிஎன்ஏ பரிசோதனை செய்து, அங்கு வாழ்ந்த மக்களின் வாழ்வியல் முறை குறித்து கண்டறியப்படவுள்ளதாகவும், அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட வாளும், மண்பானையும் 2 ஆயிரத்து 500 ஆண்டுகளுக்கு முற்பட்டதாக இருக்கக்கூடும் என கருதப்படுவதாகவும் கூறினார்.
இதற்கிடையே அகழாய்வில் கிடைத்த மண்பானை புகைப்படத்தை ட்விட்டரில் பதிவிட்ட தமிழ் பண்பாடு மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, புறநானூறு பாடலை மேற்கோள் காட்டி, தமிழர்களின் பெருமையை பறைசாற்றியுள்ளார்.