சட்டமன்றத்தில் கூறியபடி தங்கள் தலைவர் கருணாநிதிக்கு பேரவையில் தாங்களே படத்திறப்பு விழா நடத்தி சபதத்தை நிறைவேற்ற இருப்பதாக திமுக பொதுச் செயலாளரும், சட்டமன்ற அவை முன்னவருமான துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு சட்டமன்றத்தில் 100வது ஆண்டு விழாவை ஒட்டி செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் உள்ள சட்டமன்ற வளாகத்தில் கலைஞர் கருணாநிதியின் படம் இந்திய குடியரசுத் தலைவரால் திறந்து வைக்கப்பட இருக்கிறது.
இந்த நிலையில் அவை முன்னவர் மற்றும் தமிழ்நாடு நீர்வள துறை அமைச்சர் துரைமுருகன் புதிய தலைமுறைக்கு அளித்திருந்த பேட்டியில், “இந்த நூறு ஆண்டு சட்டமன்றத்தில் 56 ஆண்டுகள் சட்டமன்ற உறுப்பினராக பணியாற்றியவர் கலைஞர் கருணாநிதி அவருடன் நான் 45 ஆண்டுகள் சட்டமன்ற உறுப்பினராக அவருடன் பயணித்து உள்ளேன். தன்னுடைய வாழ்நாளில் பெரும்பகுதியை இந்த சட்டமன்றத்தில் கழித்தவர் கருணாநிதி.
சட்டமன்ற மரபுகளை பின்பற்ற கூடியவர். முதலமைச்சராக இருந்தபோது எதிர்க்கட்சிகளை மதித்தவர். தமிழ்நாடு சட்டமன்றத்தில் சட்டமன்ற உறுப்பினர், துணை கொறடா, கொறடா, எதிர்க்கட்சித் தலைவர், அமைச்சர் , முதலமைச்சர் என அனைத்து பதவிகளையும் வகித்த ஒரே தலைவர். ஒரு முறை சட்டமன்ற விவாதத்தில் எதிர்க்கட்சியைச் சேர்ந்த உறுப்பினர் ஒருவர் அப்போதைய திமுக அரசை மூன்றாம்தர அரசு என்று பேசினார். அதற்கு பதிலளித்த முதலமைச்சர் கருணாநிதி இது நான்காம் தர அரசு என்று சொன்னார். திமுக எம்எல்ஏக்கள் அனைவரும் வியந்து பார்த்தனர். பார்ப்பனர் , சத்திரியர், வைசியர், சூத்திரர் அந்த சமுதாய அடிப்படையில் நான்காவதாக உள்ள சூத்திரர் பிரிவை சேர்ந்த மக்களுக்கான அரசு இது என சொல்லும்போது திமுக உறுப்பினர்கள் அனைவரும் மேசையை தட்டினர்.
கடந்த ஆட்சியின்போது எங்கள் கட்சியைச் சேர்ந்த எம்எல்ஏ ஒருவரே கருணாநிதிக்கு படத்திறப்பு விழா செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். ஆனால், நான் அப்போதே சொன்னேன் எங்கள் தலைவருக்கு நாங்கள் ஆட்சி அமைத்த பிறகு விழா எடுத்து கொண்டாடுவோம் என்று தெரிவித்தேன் அது தற்போது நிரூபணமாகியுள்ளது” என தெரிவித்தார்.