வீடியோ ஸ்டோரி

"ஆசை வார்த்தைகளுக்கு மயங்காதீர்; ரகசிய எண்களை சொல்லாதீர்கள்": எச்சரிக்கும் காவல்துறை

Veeramani

தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு கிரெடிட் கார்டு விவரங்களை வாங்கி பணத்தை திருடிய இரண்டு பேரை டெல்லியில் வைத்து சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர். கைதான இருவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்துள்ளன.

கிரெடிட், டெபிட் கார்டு எண்களை பகிராதீர்கள், ஓடிபி எண்ணை யாரிடமும் கொடுக்காதீர்கள் என தொடர்ந்து அறிவுறுத்தும் காவல்துறை, அடித்துக்கேட்டாலும் வங்கிக் கணக்கு ரகசியத்தை ரகசியமாகவே வைத்திருக்க வற்புறுத்துகிறது.

காவல்துறையினர் எவ்வளவோ விழிப்புணர்வு ஏற்படுத்தினாலும் மோசடி நபர்களின் ஆசை வார்த்தைகள் பலரின் மதியை மயக்கி பணத்தை மாயமாக்குகிறது. சென்னை மேற்கு மாம்பலத்தை சேர்ந்த கோவிந்தராஜ், இப்படித்தான் 1 லட்சத்து 8 ஆயிரம் ரூபாயை பறிகொடுத்திருக்கிறார். வங்கி ஒன்றில் இருந்து பேசுவதாக தொலைபேசியில் அழைத்தவர், பரிசு பொருள் கிடைக்க கிரெடிட்கார்டு விவரங்கள் தேவை என கூறி கோவிந்தராஜிடம் ரகசிய எண் உட்பட அனைத்தையும் வாங்கி பணத்தை சுருட்டியுள்ளார்.

கோவிந்தராஜ் அளித்த புகாரின் பேரில் விசாரணையை தீவிரப்படுத்திய சைபர்கிரைம் காவல்துறை, டெல்லியில் முகாமிட்டு, ஜோரிபூரியை சேர்ந்த அதுல்குமார், காசியாபாத்தைச் சேர்ந்த குணால் ஆகியோரை கைது செய்தது. இருவரும் சென்னைக்கு அழைத்து வரப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், விசாரணை விவரங்கள் திடுக்கிட வைக்கின்றன.

கிரெடிட் கார்டு விவரங்களை கொண்டு பணம் திருடப்படும் போது எந்த சந்தேகமும் ஏற்படக் கூடாது என்பதற்காக டெல்லி மின்சார வாரியத்தில் நுகர்வோர் பெயர்களில் மின்கட்டணத்தை செலுத்தி உள்ளனர். டெல்லியில் மின்கட்டணம் செலுத்தும் ஏஜென்சிகளை இதற்காக பயன்படுத்திக்கொண்ட கொள்ளையர்கள், ஏஜென்சிகளுக்கு குறிப்பிட்ட தொகையை கமிஷன் கொடுத்து மின்கட்டணமாக செலுத்திய பணத்தை திரும்ப பெற்றுள்ளனர். மிகப் பெரிய போலிகால் செண்டர் கும்பல் இதன் பின்னணியில் செயல்பட்டிருப்பதும் தெரியவந்துள்ளதால் அவர்களையும் பிடிக்க வேட்டையை தொடங்கி இருக்கிறது காவல்துறை.