அரியர் மாணவர்களின் வாழ்க்கையை கேள்விக்குறியாக்காமல் தேர்ச்சி முடிவுகளை வழங்க வேண்டும். வழக்குகளை வாபஸ் பெற வேண்டும் என தமிழக இளைஞர் அரசியல் முற்போக்கு கட்சியை சேர்ந்த இளைஞர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.
தமிழகத்தில் கொரோனா சூழலை கருத்தில்கொண்டு கலை-அறிவியல், பொறியியல், எம்சிஏ படிப்புகளில் அரியர் பாடங்களுக்கு தேர்வுக் கட்டணம் செலுத்தி தேர்வு எழுத விண்ணப்பித்த அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றதாக தமிழக அரசு அறிவித்தது. இந்நிலையில் தமிழக அரசின் முடிவை ரத்து செய்யக்கோரி அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி, ராம்குமார் ஆதித்தன் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தனர்.
அரியர் தேர்வுகளுக்குக் கட்டணம் செலுத்திய மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி என்ற அறிவிப்பு, பல்கலைக்கழக மானியக் குழு விதிகளுக்குப் புறம்பானது என அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழுமம் சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்தது. இந்நிலையில், தமிழக இளைஞர் அரசியல் முற்போக்கு கட்சியை சேர்ந்தவர்கள் அரசின் தேர்ச்சி என்ற முடிவை வேண்டுமமென்றே ஒரு சில நபர்கள் எதிர்த்து வழக்கு தொடுத்துள்ளதால், அரியர் மாணவர்களின் வாழ்க்கை கேள்விக்குறியாகி உள்ளதாகவும், அரசு உடனடியாக தேர்ச்சி முடிவுகளை வழங்க வேண்டும் என்றும், நீதிமன்றத்தில் ஒரு சிலர் தொடர்ந்த வழக்கை வாபஸ் பெறக்கோரியும், முன்னாள் துணை வேந்தர் பாலகிருஷ்ணனை கண்டித்தும் மதுரை ஆட்சியர் அலுவலகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.