அயோத்தியில் 328 அடி உயரத்தில் பிரம்மாண்டமான ராமர் சிலையை அமைக்க முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான உத்தரப் பிரதேச அரசு திட்டமிட்டுள்ளது.
உத்தரப் பிரதேச ஆளுநர் மாளிகை தரப்பில் இருந்து இந்த செய்தி வெளியாகியுள்ளது. அயோத்தியில் உள்ள சார்யு ஆற்றின் கரையில் 100 மீட்டர் உயரத்தில் ராமர் சிலையை அமைக்க உத்தரப் பிரதேச சுற்றுலாத்துறை சார்பில் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. அதேபோல், தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் அனுமதிக்காவும் பரிந்துரை அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அம்மாநில சுற்றுலாத்துறை செயலாளர் அவனிஷ் குமார் அவஸ்தி கூறியுள்ளார். மேலும் தற்போது பரிந்துரை மட்டும் தான் முன் வைக்கப்பட்டுள்ளதாகவும், அதிகாரப்பூர்வமான ஒப்புதல் எதுவும் இன்னும் பெறப்படவில்லை என்று அவர் தெரிவித்தார்.
உத்தரப் பிரதேச மாநில சுற்றுலாத்துறை கையேட்டில் இருந்து தாஜ்மஹால் நீக்கப்பட்டதை அடுத்து கடும் விமர்சனம் ஏற்பட்டது. இந்த நிலையில் சுற்றுலாத்துறை சார்பில் ராமர் சிலை அமைக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.