டிரெண்டிங்

”நம்ப மாட்டீங்கனு தெரியும்; அதான் இங்கயே வாந்தி..” காப்பீடு பணத்துக்காக பெண் செய்த ஸ்டண்ட்

”நம்ப மாட்டீங்கனு தெரியும்; அதான் இங்கயே வாந்தி..” காப்பீடு பணத்துக்காக பெண் செய்த ஸ்டண்ட்

JananiGovindhan

நோய் வந்தால் அதனால் படும் அவதியை காட்டிலும் அந்த நோய்க்கு சிகிச்சை மேற்கொள்ள ஆகும் செலவைக் கண்டுதான் அனைவருக்குமே பயத்தை ஏற்படுத்தும். இதற்கெல்லாம் பாதுகாப்பான அரணாக இன்ஷுரன்ஸ் இருக்கும் என்ற நம்பிக்கைதான் பலரையும் தேற்றி வருவதாக இருக்கும்.

ஆனால் அந்த இன்ஷுரன்ஸ் எல்லா வகையான நோய் பாதிப்புக்கும் கவரேஜ் செய்யப்படாமல் இருப்பதால் காப்பீடுதாரர்கள் உரிய சிகிச்சை மேற்கொள்ள முடியாமல் போகும் நிலைக்கு ஆளாக்கப்படுகிறார்கள். சில இன்ஷுரன்ஸ் நிறுவனங்கள் காப்பீடுதாரர்களை அலைக்கழிக்கவும் தவறுவதில்லை.

இப்படி இருக்கையில், அமெரிக்காவைச் சேர்ந்த சாண்டி ஹானிக் என்ற காமெடியன் தனக்கு இருக்கும் தீராத வாந்தி தொல்லைக்கு இன்ஷுரன்ஸ் கவரேஜ் மறுக்கப்பட்டதை அடுத்து அந்த காப்பீடு நிறுவனத்தின் முன்பே வாந்தி எடுத்து முறையீடு செய்திருக்கிறார்.

gastroparesis என்ற வயிற்று தொல்லை காரணமாக அடிக்கடி குமட்டல் ஏற்படுவது, வயிற்றில் வலி, வீக்கம் மற்றும் என்ன சாப்பிட்டாலும் வாந்தி வருவது போன்ற அறிகுறிகளை சாண்டி ஹானிக் கொண்டிருக்கிறார். இது அவருக்கு கடந்த 3 ஆண்டுகளாக இருக்கும் உபாதையாக உள்ளதாம்.

இந்த நோய்க்கு நிரந்தரமான தீர்வு இல்லாவிட்டாலும் இந்த உபாதைகளை தணிப்பதற்கான சிகிச்சை இருக்கிறதாம். அதற்கான இன்ஷுரன்ஸ் கவரேஜிற்காக சாண்டி ஹானிக் விண்ணப்பித்திருந்த போது அந்த இன்ஷுரன்ஸ் கொடுக்க அமெரிக்காவின் Anthem என்ற பிரபல காப்பீடு நிறுவனம் மறுத்திருக்கிறது.

இதனால் உரிய சிகிச்சை எடுக்க முடியாமல் சாண்டி ஹானிக் தொடர்ந்து அவதிப்பட்டு வருகிறார். ஒரு கட்டத்தில் அந்த இன்ஷுரன்ஸ் கம்பெனிக்கே சென்று தனக்கான காப்பீடை மேற்கொள்ளும்படி கேட்டிருக்கிறார். ஆனாலும் அவர்கள் தொடர்ந்து மறுப்புத் தெரிவித்ததால் தனக்கு இருக்கும் தொந்தரவை அவர்களை புரிய வைக்கும் வகையில் காப்பீடு நிறுவன அலுவலகத்தின் முன்பே தொடர்ச்சியாக வாந்தி எடுத்து நிரூபித்திருக்கிறார்.

சாண்டி ஹானிக்கின் இந்த ஸ்டண்ட் குறித்து அறிந்த லாஸ் ஏஞ்சலஸ் காவல்துறையினர் இருவர் சாண்டியின் வீட்டுக்கே சென்று அவரது வயிற்று தொல்லை உண்மையா இல்லையா என சரிபார்த்திருக்கிறார்கள். இருந்த போதிலும் தனக்கான இன்ஷுரன்ஸ் கவரேஜ் இன்னும் சரிசெய்யப்படவில்லை என்று சாண்டி தெரிவித்திருக்கிறார்.

இந்த நிகழ்வு கடந்த ஜனவரி மாதமே நடந்திருந்தாலும் இது தொடர்பான அனைத்தையும் பதிவு செய்து சாண்டி தனது இன்ஸ்டாகிராம், ட்விட்டர், யூடியூப் போன்ற அனைத்து சமூக வலைதளங்களிலும் கடந்த திங்கள்கிழமைதான் பகிர்ந்திருக்கிறார்.