சகினா-குர்மாயில் சிங் Twitter
டிரெண்டிங்

இதுவல்லவா பாசப்போராட்டம்! பிரிவினைக்கு பிறகு 76 ஆண்டுகள் கழித்து தனது சகோதரனை சந்தித்த பாக். பெண்!

தனது சகோதரனை பிரிந்த பாகிஸ்தானை சேர்ந்த பெண் ஒருவர் பாகிஸ்தான் பிரிவினைக்கு பிறகு 76 ஆண்டுகள் கழித்து தனது சகோதரனை நேரில் பார்த்தபோது, கண்ணீர் மல்க அரவணைத்து தனது அன்பை பகிர்ந்து கொண்டன காட்சி சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

PT WEB

வாழ்க்கையின் பக்கங்கள் பல்வேறு விதமான சுவாரஸ்ய திருப்பங்களை கொண்டுதான் எழுதப்படுகிறது. சில நேரங்களில் நாம் எதிர்ப்பார்த்ததை விட மகிழ்ச்சிகரமான விஷயங்கள் அந்தப் பக்கங்களில் இடம்பெறவே செய்யும். அத்தகைய தருணங்களில் நம் கண்களில் ஆனந்த கண்ணீர் தழும்பும். அப்படியான ஒரு நிகழ்வுதான் பாகிஸ்தானை சேர்ந்த பெண்ணிற்கு நிகழ்ந்துள்ளது. பாகிஸ்தானை சேர்ந்த அந்தப் பெண், பாகிஸ்தான் பிரிவினையின் போது தனது தந்தையை விட்டு பிரிந்து சென்ற சகோதரனை 76 ஆண்டுகள் கழித்து நேரில் பார்த்தபோது, கண்ணீர் மல்க அரவணைத்து தனது அன்பை பகிர்ந்து கொண்டார். இந்த காட்சிகள்தான் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இதுகுறித்து இனி விரிவாக பார்க்கலாம்.

இந்தியா - பாகிஸ்தான் பிரிவினையானது சொல்ல முடியாத பல துயரச் சம்பவங்களை தன்னகத்தையே கொண்டுள்ளது. 1947 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 ஆம் தேதி இந்தியாவும், ஒரு நாள் முன்பாக பாகிஸ்தானும் சுதந்திரம் அடைந்தன. பாகிஸ்தான் தனிநாடாக பிரிக்கப்பட்ட பின்பு இரு தரப்பில் இருந்து பலரும் இடம்பெயர்ந்தார்கள். 1949 ஆம் ஆண்டு பிரிந்த குடும்பங்களை மீண்டும் அவர்களுடன் சேர்ந்து கொள்ள ஒரு முயற்சி மேற்கொள்ளப்பட்டது. அப்படியான ஒரு முயற்சியில் நடந்த சோகத்தில் தான் தன்னுடய சகோதரை பிரிந்துள்ளார் அந்தப் பெண்.

சகினா-குர்மாயில் சிங்

பாகிஸ்தானில் ஷேகுபுராவில் உள்ள குர்தாஸ் கிராமத்தில் வசிபவர் சகினா பி. வயது 74. 1961 ஆம் ஆண்டு தன் சகோதரர் குர்மாயில் சிங் தன் தாய்க்கு எழுதிய கடிதத்தை கண்டதிலிருந்தே எப்படியாவது தனது சகோதரனை கண்டுபிடிக்க வேண்டும் என்று நினைத்து அதற்கான முயற்சியில் தொடர்ந்து ஈடுபட்டு வந்த சகினா அதனை தற்போது நிறைவேற்றிக் காட்டியிருக்கிறார். கர்தார்பூர் எல்லைப்பகுதியில் இந்த சந்திப்பு நிகழ்ந்துள்ளது. அது நடப்பதற்கு யூட்யூப்பில் வந்த ஒரு நிகழ்ச்சிடான் காரணமாக அமைந்துள்ளது.

பாகிஸ்தானை சேர்ந்த யூட்டூபர் நசீர் தில்லான். இவர் ”பஞ்சாபி லெஹர் ” என்ற யூட்டூப் சேனலை நடத்தி வருகின்றார். இவரது சேனலில் பிரிவினையால் பிளவு பட்டு பிரிந்து வாடும் குடும்பங்களை கண்டு பிடிப்பது அவர்களை சேர்ப்பது போன்ற வீடியோக்களை பதிவிட்டு வருகின்றார். இந்த நிலையில், தனது சகோதரனை பிரிந்துவாடும் சகினாவிற்கு உதவும் வகையில் இவரின் யூட்டூபில் இது குறித்து வீடியோ ஒன்றை பதிவிட்டார் நசீர்.

இந்த வீடியோ வைரல் ஆன நிலையில் சகினாவின் சகோதரர் குர்மாயில் சிங் லூதியானவில், ஜசோவால் சுடான் கிராமத்தில் வசிப்பது உறுதியானது. இறுதியில் இருவரும் சந்திக்கவே மாறி மாறி தங்களது அன்பை கண்ணீர் மூலம் வெளிபடுத்தினர்.

இந்த சம்பவம் குறித்து கூறுகையில், “நூர்புர் கிராமத்தில் லூதியானாவில் வசித்து வந்தவர் கர்மேட் பி. இவர் சகீனாவின் தாய். இவரை ஒரு கும்பல் கடத்தி சென்றுள்ளனர். பிறகு கர்மேட்ன் குடும்பத்தினர் அங்கிருந்து புறப்பட்டு பாகிஸ்தானுக்கு சென்றுள்ளனர். அதன் பிறகு அவரை தேட எந்த முயற்சியும் எடுக்கவில்லை. பிறகு போலீசில் புகார் அளிக்கவே சகினாவின் தந்தையை அழைத்து இந்தியாவுக்கு அழைத்துள்ளனர் போலீசார். அங்கு கர்மேட்டை காணவே விளையாட சென்ற அவரின் மகனை விட்டு விட்டு சகினாவின் தாயை மட்டும் அழைத்து பாகிஸ்தான் சென்றனர் போலீசார்” என்றார்.

இது குறித்து சகினா கூறுகையில் “ இந்த சம்பவம் நடந்து 2 வருடங்கள் கழித்துதான் நான் பிறந்தேன். இது குறித்து என் தந்தை கூறிதான் எனக்கு தெரியவந்தது. மேலும் என் சகோதரரின் புகைப்படம், என் தாய்க்கு அவர் எழுதிய கடிதம் மட்டுமே என் சகோதரரின் நினைவாக என்னிடம் இருந்தது” என்று கூறினார்.

பல வருடங்கள் கழித்து இருவரும் சந்தித்து கொண்ட நிலையில் சகீனா தனது சகோதரருக்கு ஒரு கடிகாரத்தையும், வெள்ளி ராக்கியையும் பரிசாக அளித்தார். குர்மெயில் தனது சகோதரிக்கு தனது கிராமத்தில் செய்யப்பட்ட பிரத்தியேக பிஸ்கட் ஒன்றை அன்புடன் வழங்கி மாறி மாறி தங்களது அன்பை பரிமாறிக் கொண்டனர். மேலும், தனது குடும்ப உறுப்பினர்கள் 16 பேரையும் அழைத்து வந்து தனது சகோதரரை வரவேற்றார் சகீனா.