டிரெண்டிங்

“பெண்‌ என்றும் பாராமல் என்னை வெளியேற்றினார்கள்” ‌ - விஜயதரணி ஆவேசம்

rajakannan

சபாநாயகர் தனபால் தன்னை இழிவான முறையில் பேசியதாக காங்கிரஸ் எம் எல் ஏ விஜயதரணி குற்றம்சாட்டியுள்ளார். பேரவையில், மின்சாரம் தாக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு கேட்க, தான்‌ ஏற்கனவே அனுமதி கேட்டிருந்த நிலையில், அதற்கு அனுமதி மறுத்ததோடு, அவையில்‌ இருந்து வெளியேற்றவும் உத்த‌ரவிட்டதாக அவர் சாடியுள்ளார். அவ்வாறு வெளியேற்றும் போது தான் துன்புறுத்தப்பட்டதாகவும் அவர் கடு‌மையான குற்றச்சாட்டு‌களை முன் வைத்துள்ளார்.

இருப்பினும், தொடர்ந்து அவை விதிகளை மீறி நடந்து கொண்டதால் தான் விஜயதரணி மீது நடவடிக்கை எடுத்ததாக சபாநாயகர் தனபால் கூறியுள்ளார். 

முன்னதாக, காங்கி‌ரஸ் எம்.எல்.ஏ விஜயதரணி வெளியேற்றப்பட்டதைக் கண்டித்து பேரவையில் காங்கிரஸ் உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். காங்கிரஸ் சட்டமன்றக் குழுத் தலைவர் ராமசாமி விஜயதரணி வெளியேற்றப்பட்ட விவகாரத்தை எழுப்பினார். 

அதற்கு பதில் அளித்த சபாநாயகர் தனபால், என் மீது நடவடிக்கை எடுத்து பாருங்கள் என்று விஜயதரணி மிரட்டும் தொனியில் பேசியதாகவும், அப்படி பேசும் போது அவர் மீது நடவடிக்கை எடுக்காமல் என்னால் இருக்க முடியாது என்றும் கூறினார். அவை விதிகளை மீறி நடந்து கொண்டதால் விஜயதரணி மீது ந‌டவடிக்கை எடுத்ததாகவும்‌ தொடர்ந்து இது போல நடந்து கொண்டதால் கடுமையான நடவடிக்கைகளை ‌எதிர்கொள்ள நேரிடும் என்றும் எச்சரிக்கை விடுத்தார்.‌ சபாநாயகரின் விளக்கத்தை ஏற்க முடியாது எனக் கூறி காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.