விஷ்வ இந்து பரிஷத் அமைப்பினர் நடத்தும் ராம ராஜ்ஜிய யாத்திரை தமிழகத்திற்குள் வர அனுமதிக்கக் கூடாது என சட்டப்பேரவை உறுப்பினர்கள் கருணாஸ், தனியரசு, தமீமுன் அன்சாரி மற்றும் அபுபக்கர் ஆகியோர் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவந்தனர். இந்த விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளாததை கண்டித்து அவர்கள் சட்டப்பேரவையிலிருந்து வெளிநடப்பு செய்தனர்.
நால்வரும் கொண்டு வந்த கவன ஈர்ப்பு தீர்மானத்தில் விஷ்வ இந்து பரிஷத் நடத்தும் ராம ராஜ்ஜியம் யாத்திரை இன்று தமிழகம் வரவிருப்பது சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. தமிழகத்தில் இதுபோன்ற யாத்திரைகளுக்கு இதற்கு முன் அனுமதி அளிக்கப்பட்டதில்லை என கூறி இதுபோன்ற யாத்திரையால் கலவரம் பிரச்னைகள் ஏற்பட வாய்ப்பு இருப்பதால் இதற்கு அனுமதியளிக்க கூடாது என கவன ஈர்ப்பு தீர்மானத்தில் குறிப்பிட்டுள்ளனர். இது விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படாததால் எம்எல்ஏக்கள் நால்வரும் வெளிநடப்பு செய்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்கள், "ரத யாத்திரை மூலம் தமிழகத்தில் அமைதியை கெடுக்க வேண்டாம் என்று வலியுறுத்தினார். மேலும், யாத்திரைக்கு அனுமதி அளித்தால் கட்சி வேறுபாடுகளை களைந்து போராடுவோம்" என்று தெரிவித்தனர்.