டிரெண்டிங்

“சிபிஐ விசாரணையை எதிர்கொள்ள முதல்வருக்கு தைரியம் உள்ளதா?” - ஆ.ராசா

“சிபிஐ விசாரணையை எதிர்கொள்ள முதல்வருக்கு தைரியம் உள்ளதா?” - ஆ.ராசா

rajakannan

நெடுஞ்சாலை ஒப்பந்தம் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிடத் தயாரா என முன்னாள் மத்திய அமைச்சரும், திமுக கொள்கை பரப்புச் செயலாளருமான ஆ.ராசா வலியுறுத்தியுள்ளார். 

‘தமிழகத்தில் நெடுஞ்சாலைத்துறை ஒப்பந்த பணிகள் ஒதுக்கியதில் முறைகேடு நடந்துள்ளது. இதில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோருக்கு பங்கு உள்ளது. இதுகுறித்து லஞ்ச ஒழிப்புத்துறையில் புகார் செய்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை’ என்று கூறி திமுக சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி, வழக்கை சிபிஐ விசாரிக்கவும் ஒரு வாரத்தில் இதுதொடர்பான ஆவணங்களை சிபிஐ-யிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.

நெடுஞ்சாலை ஒப்பந்த புகார் தொடர்பாக சிபிஐ விசாரிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதால், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பதவியை ராஜினாமா செய்துவிட்டு விசாரணையை எதிர்கொள்ள வேண்டும் என ஆ.ராசா கூறியுள்ளார். 

இதுதொடர்பாக சென்னை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ஆ.ராசா, “தங்கள் மீதான லஞ்ச, ஊழல் குற்றச்சாட்டுக்களை மறைப்பதற்காக திமுக மீதும் திமுக தலைவர் மீதும் முதலமைச்சர் பழனிசாமி உள்ளிட்டோர் குற்றச்சாட்டுக்களை கூறி வருகின்றனர்.

நாங்கள் லஞ்ச ஒழிப்பு விசாரணைதான் கேட்டோம்; சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டது நீதிமன்றம். முதல்வர் என்னைப் போல் ராஜினாமா செய்துவிட்டு விசாரணையை எதிர்கொள்ளட்டும். சி.பி.ஐ விசாரணையை எதிர்கொள்ள எடப்பாடி பழனிசாமிக்கு தைரியம் உள்ளதா? திமுக வழங்கிய ஆதாரங்களை கருத்தில் கொண்டு சிபிஐ விசாரணைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. டெண்டரில் உலக வங்கி விதிமுறைகள் பின்பற்றவில்லை என்பது தெளிவாக உள்ளது.

ஒவ்வொரு எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவிலும் எங்களை திட்டுவது, எங்களது தலைவரை திட்டுவதற்கு பதிலாக ஒரே ஒரு வெள்ளை அறிக்கை வெளியிடுங்கள். இதுவரை எத்தனை ஆன்லைன் டெண்டர்கள் விடப்பட்டுள்ளது. அதில் எத்தனை பேர் போட்டியிட்டுள்ளார்கள். இரண்டு பில்டர்ஸ் மட்டும் வருவதற்கு காரணம் என்ன?. மற்றவர்கள் எப்படி தடுக்கப்பட்டார்கள். ஒரு வெள்ளை அறிக்கை கொடுங்க” என்றார். 

முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் பழனிசாமி, “என் மீதான புகார் என்பதால் உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்துள்ளேன். டெண்டர் விட்டதில் ஊழல் நடைபெற்றதாக உயர்நீதிமன்றம் சொல்லவில்லை. விசாரணை நியாயமாக நடைபெற வேண்டும் என்பதற்காகவே சிபிஐ-க்கு மாற்றப்பட்டது” என்று கூறினார்.