டிரெண்டிங்

2 வருடங்களுக்கு பிறகு கணவருடன் சேர்ந்து வாழ்ந்த மனைவி.. திடீரென வீட்டில் சடலமாக மீட்பு

2 வருடங்களுக்கு பிறகு கணவருடன் சேர்ந்து வாழ்ந்த மனைவி.. திடீரென வீட்டில் சடலமாக மீட்பு

webteam

கணவருடன் தகராறு ஏற்பட்டு தாய் வீட்டிலிருந்த மனைவி, 2 வருடங்களுக்குப் பின் சேர்ந்த நிலையில், திடீரென தூக்கிட்டபடி சடலமாக மீட்கப்பட்டார்.

மயிலாடுதுறை மாவட்டம் பொறையார் பகுதியை சேர்ந்தவர் வேல்முருகன் (39). இவர் தரங்கம்பாடியில் மெடிக்கல் வைத்து நடத்தி வருகிறார். இவருக்கும் திருவாரூர் மாவட்டம் குடவாசல் பகுதியை சேர்ந்த செல்வராஜ் மகள் காயத்ரி என்பவருக்கும் கடந்த 2014ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்று, 5 மற்றும் 3 வயதில் இரண்டு மகன்கள் உள்ளனர். திருமணம் ஆன தொடக்கத்திலிருந்தே இருவருக்கும் இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. அத்துடன் வேல்முருகனுக்கும் அவரது மெடிக்கல் கடையில் வேலை செய்யும் ஒரு பெண்ணுக்கும் தொடர்பு இருந்ததாக காயத்ரி தனது பெற்றோர்களிடம் கூறியுள்ளார்.

வேல்முருகனுக்கு போதை ஊசி போட்டுக் கொள்ளும் பழக்கம் இருந்ததன் காரணமாக அவர் சைக்கோ தனமாக நடந்து காயத்ரியை கொடுமைப்படுத்தியதாக கூறப்படுகிறது. இதனால் பிரச்சினை ஏற்பட, காயத்ரி இரண்டாவது மகன் பிறந்த சில மாதங்களில் தாய் வீட்டுக்கு சென்றுவிட்டார். இரண்டரை வருடங்கள் கடந்த நிலையில், 4 நாட்களுக்கு முன்பு குடவாசலில் உள்ள செல்வராஜின் வீட்டுக்கு சென்ற வேல்முருகன், காயத்ரியை சமாதானம் செய்து பொறையாரில் உள்ள தனது வீட்டுக்கு அழைத்துச் சென்றுள்ளார்.

இந்நிலையில் நேற்று காயத்ரி தனது வீட்டின் அறையில் உள்ள ஃபேனில் தூக்கிட்ட நிலையில் சடலமாக தொங்கினார். தகவல் அறிந்து வந்த பொறையாறு போலீசார் காயத்ரியின் உடலை பிரேத பரிசோதனைக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

காயத்ரியின் மரணத்தில் வேல்முருகன், அவரது தாய் ராஜலட்சுமி மற்றும் இரு சகோதரிகள் ஆகியோர் மீது சந்தேகம் இருப்பதாக அவரது தந்தை செல்வராஜ் பொறையார் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் பொறையார் போலீசார் வேல்முருகனை காவல்நிலையத்திற்கு கொண்டு சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் காயத்ரியின் மரணத்தால் ஆத்திரமடைந்த அவரது உறவினர்கள் சிலர் வேல்முருகனின் தாய் ராஜலட்சுமி வசித்துவந்த கூரை வீட்டுக்கு தீ வைத்தனர். இதில் வீட்டில் வைத்திருந்த டிவி, பீரோ உள்ளிட்ட பொருட்கள் எரிந்தன. இச்சம்பவம் குறித்து பொறையாறு ஆய்வாளர் செல்வம் வழக்குப்பதிவு செய்துள்ளார்.

திருமணமாகி இன்னும் ஏழு ஆண்டுகள் நிறைவடையாததால் மயிலாடுதுறை ஆர்டிஓ மகாராணி விசாரணை நடத்தி வருகிறார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.