ஹெச்.ராஜாவை தேசிய செயலாளர் பதவியிலிருந்து விடுவித்தது ஏன் என்பது குறித்து முன்னாள் மத்திய அமைச்சர் பொன்ராதாகிருஷ்ணன் கருத்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து திருச்செந்தூரில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “பிரதமர் விவசாயிகளுடைய வருமானத்தை இரட்டிப்பாக மாற்றுவேன் என்று உறுதிகூறி நின்று கொண்டிருக்கிறார். விவசாயிகளின் வாழ்க்கையில் மாற்றம் கொண்டுவர வேண்டுமென்றால் அடிப்படையான தேவை, விவசாயத்திற்கு தேவையான அனைத்து உதவிகளையும், அவருக்கு ஏற்றாற்போல் செய்து கொடுப்பது முக்கியமான அம்சம்.
அதுமட்டும் போதாது. இடைத்தரகர்கள் மத்தியில் சிக்கி விவசாயிகள் சீரழிய கூடாது. பிரதமர் நரேந்திர மோடி கொண்டு வந்திருக்கிற விஷயம், எதிர்காலத்தில் விவசாயிகள், விவசாயம் செய்த காரணத்தினால் நஷ்டப்படுவதற்கான வாய்ப்புகள் இல்லை என உறுதிபடுத்துவதாகவே அமையும்.
தற்போது நடைபெற உள்ள பீகார் தேர்தலில் பாஜக வெற்றி வாய்ப்பானது உறுதியான வெற்றியாக இருக்கும். கடந்த முறை பெற்ற வாக்கு விகிதத்தை விட, இடங்களைவிட அதிகப்படியான இடங்களை பெற்று, பீகாரில் மகத்தான ஆட்சி பாஜக கூட்டணியில் அமையும்” எனத் தெரிவித்தார்.
ஹெச்.ராஜாவை தேசிய செயலாளர் பதவியிலிருந்து விடுவித்தது ஏன் என்பது குறித்த கேள்விக்கு “பொதுவாக பொறுப்புகள் வழங்கப்படும்போது ஒரு பொறுப்பாளருக்கு ஒரு பொறுப்பு கொடுக்கப்படும். இன்னொரு பொறுப்பை மாற்றி கொடுப்பது என்பதெல்லாம் நிகழும். இந்த பொறுப்பு இல்லையென்றால் வேறுவிதமான பொறுப்புகள் கொடுக்க வாய்ப்புகள் இருக்கிறது. இன்னும் அனுபவிக்க வேண்டிய விஷயங்கள் இருக்கிறது” என்று தெரிவித்தார்.