டிரெண்டிங்

”மேஜிக் போன்று இருக்கிறது”.. ஜங்க் புட்டில் இருந்து பழங்களுக்கு மாறிய அர்ஜெண்டினா இளைஞர்!

”மேஜிக் போன்று இருக்கிறது”.. ஜங்க் புட்டில் இருந்து பழங்களுக்கு மாறிய அர்ஜெண்டினா இளைஞர்!

JananiGovindhan

தினசரி ஒரு பழம் சாப்பிடுவது உடல் நலத்துக்கு நல்லது என பலரும் பல வகையில் கூறினாலும் கேட்காமல் வகை வகையான ஜங்க் உணவுகளை சாப்பிட்டு ஆரோக்கியத்தை கெடுத்துக் கொள்வதற்கே முனைப்பாக இருக்கிறார்கள்.

ஆனால் ஒரு கட்டத்தில் உடலுக்கு ஏதும் கேடு வந்த பிறகே பழங்கள், காய்கறிகள் பக்கமோ, எண்ணெய் பண்டங்களை தவிர்த்து நல்ல புரதங்கள் நிறைந்த இறைச்சிகளை சாப்பிட தொடங்குகிறார்கள்.

இப்படிதான் தொடர்ந்து ஜங்க் உணவுகளாக சாப்பிட்டு வந்த இளைஞர் ஒருவர் தற்போது வெறும் பழங்களாக மட்டுமே சாப்பிட்டு வருகிறார். அது ஏன்? என்ன காரணம் தெரியுமா? அது பற்றி காண்போம்.

அர்ஜெண்டினாவைச் சேர்ந்த பாப்லோ என்பவர் பழங்களை வேண்டி விரும்பி சாப்பிடுவதையே தன் முழுநேர வேலையாக வைத்திருக்கிறாராம். இதுவரை 20க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு சென்று 200க்கும் மேலான வகைகளில் உள்ள பழங்களை ருசித்திருக்கிறார்.

இதுபோக உலகத்தில் உள்ள எல்லா வகையான பழங்களையும் சாப்பிட்டு விட வேண்டும் என்பதை லட்சியமாகவே கொண்டிருக்கிறாராம் பாப்லோ.

சில ஆண்டுகளுக்கு முன்பு எல்லோரை போலவே ஒரு சாமானியனாகவே இருந்திருக்கிறார் பாப்லோ. அதாவது, ஆரோக்கிய நலனில் அக்கறையின்றி, எந்நேரமும் ஜங்க் உணவுகளை சாப்பிடுவது, புகைப்பது, குடிப்பது என இருந்திருக்கிறார்.

இப்படியாக இருந்து வந்த பாப்லோ திடீரென ஒரு அரியவகை தோல் நோயால் பாதிக்கப்பட்டிருக்கிறார். இதனால் அவரது உடல் முழுவதும் சிவப்பாக இருந்ததோடு வலியையும் கொடுத்திருக்கிறது. சில நேரங்களில் ரத்தமும் வந்திருக்கிறது.

இதற்காக பல மருத்துவர்களை அணுகி பல வகையான சிகிச்சைகளையும் பாப்லோ மேற்கொண்டிருக்கிறார். ஆனால் அவருக்கு இருந்த தொந்தரவு நீங்கிய பாடில்லை. இதனால் பல காலம் கடும் அவதிக்கு ஆளாகியிருந்தார்.

ஒருநாள் இயற்கை சார்ந்த உணவு பழக்கத்தை கடைப்பிடிக்கும்படி மருத்துவர் ஒருவர் பரிந்துரைத்ததன் பேரில் பாப்லோ தன்னுடைய உணவு பழக்கத்தை பழங்கள் பக்கம் திருப்பியிருக்கிறார். அதன்படி, தொடர்ந்து பழங்களையே உட்கொண்டு வந்ததால் பாப்லோவுக்கு இருந்த தோல் பாதிப்பு சரியாகியிருக்கிறது.

இது மேஜிக் போன்று இருக்கிறது என்று Nas Daily தளத்திடம் கூறியுள்ள பாப்லோ, பழங்கள் சாப்பிடுவதை நோயிலிருந்து மீள்வதற்கு மட்டுமல்லாமல் தன்னுடைய lifestyle ஆகவே மாற்றியிருக்கிறேன் எனவும் தெரிவித்துள்ளார்.

இதற்காக புதுப்புது பழங்களாக தேடி ருசிக்க வேண்டும் என அர்ஜெண்டினாவில் இருந்து கிளம்பி ஒரு பயணத்தையே மேற்கொண்டிருக்கிறார் பாப்லோ. “முதலில் உள்ளூரில் உள்ள மார்க்கெட்டிற்கு சென்று அங்கிருக்கும் பழங்களை வாங்கி சாப்பிட்டேன். பின்னர் 20 நாடுகளுக்கு விமானத்தில் பறந்து பலரும் அறிந்திருக்காத 200க்கும் மேலான பழங்களை சாப்பிட்டிருக்கிறேன்” என nas dailyயிடம் கூறியுள்ளார்.

பாப்லோவின் இந்த பயணம் அவரை பழங்களின் நிபுணராகவே பார்க்கச் செய்திருக்கிறது. இதன் மூலம் புதுப்புது மனிதர்களை சந்தித்து, வாழ்நாளுக்குமான நட்பை வளர்த்து, பல மொழிகளையும் கற்றுக் கொண்டிருக்கிறார்.

ஆரோக்கியமான உணவுகளை எடுத்துக்கொள்ள பல ஆயிரங்களில் செலவழிப்பதை காட்டிலும் சில நூறுகளில் விற்கும் பழங்களை சாப்பிட்டாலே போதும் என்பதை பாப்லோவின் கதையின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.